கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

?எனக்கு வயது 57. கடந்த ஆறு மாத காலமாக தைராய்டு பிரச்னைக்கு மருந்து சாப்பிடுகிறேன். கடந்த மாதம், வலது கண் இயற்கைக்கு மாறாகச் சற்றுப் பெரிதானது. விழிகளை மூடவோ, அசைக்கவோ முடியவில்லை. `இது, தைராய்டால் ஏற்படும் `ஆன்டிஜென் கிரேவ்’ (Antigen Grave) எனப்படும் ஒரு வகைப் பிரச்னை’ என்று சொல்லி, கதிரியக்கச் சிகிச்சை கொடுத்தார்கள் மருத்துவர்கள். ஆன்டிஜென் கிரேவ் என்பது என்ன… தைராய்டு பிரச்னை இருந்தால் கண்களில் பாதிப்பு ஏற்படுமா… கண்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா?
– மீனேஸ்வரி, திருச்சி

உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு அதிகமானால் ஏற்படும் பிரச்னைதான் இந்த `கிரேவ் நோய்’ (Grave Disease). ஹார்மோன் அளவு அதிகரித்தால், கண் பிரச்னை ஏற்படுவது இயல்பே. ஹார்மோனின் அளவைப் பொறுத்து ஸ்டீராய்டு மருந்துகளோ அல்லது கதிரியக்கச் சிகிச்சையோ, அறுவைசிகிச்சையோ பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், உங்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. `தைராய்டு ரிசப்டர் ஆன்டிபாடிஸ்’ (Thyroid Receptor Antibodies) அளவு அதிகரித்தால், கண்களைச் சுற்றியிருக்கும் `ஆர்பிட்டல்’ (Orbital) தசைகள் பாதிக்கத் தொடங்கும். அதனால் கண் பாதிப்பு ஏற்படும்.

நீங்கள் சொல்வதுபோல விழிகளை மூட முடியாமலும், அசைக்க முடியாமலும் திணற இதுதான் காரணம். இப்படியான கண் பிரச்னைகள், `பிராப்டோசிஸ்’ (Proptosis) எனப்படும். அதேபோல் கண்கள் சிவப்பது, பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிவது (Double Vision), பார்வைக் குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் போன்றவைகூட ஏற்படலாம். மற்றபடி, உடலில் தைராய்டு ஹார்மோன் அளவு சீராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

TSH, FT3 மற்றும் FT4 போன்ற பரிசோதனைகளின்போது அளவுகள் அனைத்தும் சீராக இருக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சிகரெட் புகை இருக்கும் சூழல்களைத் தவிர்த்துவிடுங்கள். நாளமில்லாச் சுரப்பிக்கான நிபுணரை அணுகுவதுபோலவே, கண் மருத்துவரைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சந்தித்து ஆலோசனை பெறுவதும் அவசியம்.

தைராய்டு பிரச்னைக்கு கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும்போது, பெரும்பாலும் `20 கிரே’ (Gray) என்ற அளவுதான் பரிந்துரைக்கப்படும். இது மிகவும் குறைந்த அளவே. ஆனாலும், கதிரியக்கச் சிகிச்சையால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். உதாரணமாக, புருவம் அல்லது கண் இமை முடிகள் விழுதல், கண்கள் வறண்டுபோதல், கண்புரை போன்றவை ஏற்படலாம். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேவேளையில் மேற்சொன்ன பக்கவிளைவுகளும் தற்காலிகமாகத்தான் இருக்குமே தவிர, வாழ்நாள் பாதிப்பாக இருக்காது. கண் மருத்துவரின் அறிவுரையைச் சரியாகப் பின்பற்றினால் இவற்றை எளிமையாகத் தவிர்க்கலாம்.

?எனக்கு நெஞ்சுப் பகுதியில் அடிக்கடி வலி எடுக்கிறது. இது ஏதாவது இதயப் பிரச்னையாய் இருக்குமா?
– நா.காந்தி, திருவாரூர்.

உங்கள் வயது என்னவென நீங்கள் குறிப்பிடவில்லை. இருந்தாலும் நெஞ்சுப் பகுதியில் வலி இருந்தாலே இதயப் பிரச்னை என நீங்களாக சுயமாக முடிவு செய்ய வேண்டாம். வாயுத் தொல்லை இருந்தாலும் வலி இருக்கும். வலி சுள்ளென இருக்கிறது, அதிகமாக வியர்க்கிறது, நடக்கும்போது வலிக்கிறது எனில் இதயத்தைப் பரிசோதிப்பது நல்லதுதான். எதுவாய் இருந்தாலும் அருகில் உள்ள மருத்துவரை நாடுங்கள். நீங்களாக சுய மருத்துவம் செய்யாதீர்கள். ஈசிஜி மூலம் நெஞ்சு வலி இருந்தால் கண்டறியலாம். வாயுத் தொல்லை என்றாலும் மருத்துவர் உரிய மருந்து தருவார்.

?மெட்ராஸ் ஐ ஏன் ஏற்படுகிறது? அதைத் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன?
– கே.பி.ராஜு, மதுரை.

மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் (கன்சங்டிவிடிஸ் – Conjunctivitis) முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால், இந்த நோய்க்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக உருமாறும் வைரஸ்கள் பரவலால், சில காலம் அடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஐ’ திரும்பவும் பரவ வேகமெத்துள்ளது. கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்கள் சிவத்தல், நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன.

பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்.தொற்றால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகித் தனியாகப் படுத்துக்கொள்ள வேண்டும்.

மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள், பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.பழைய கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்த்துவிட்டு மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னர் புதியதை பயன்படுத்த வேண்டும்.தாய்ப்பால், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சுயமாக மருத்துவம் செய்ய வேண்டாம், மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும்.நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.

?என் வயது 30. திருமணமாகிவிட்டது. தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்குக் கடந்த ஐந்து வருடங்களாகச் சிறுநீரகக்கல் பிரச்னை இருக்கிறது. ஒரு தடவை மருந்து கொடுத்து, கல்லை வெளியேற்றியும் இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருக்கிற இந்த நேரத்தில், மறுபடியும் சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஏற்படுகிற வலிபோல ஆரம்பித்திருக்கிறது. என்னுடைய மருத்துவரோ, `கிட்னி ஸ்டோனுக்குத் தற்போது எந்தச் சிகிச்சையும் தர முடியாது. அது வயிற்றிலிருக்கும் சிசுவை பாதிக்கும்’ என்று சொல்லிவிட்டார். நான் என்ன செய்வது?
– மதுபாலா, இராமநாதபுரம்

முதலில், பூரணநலத்துடன் உங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க வாழ்த்துகள். இப்போது உங்கள் பிரச்னைக்கு வருவோம். நீங்கள் கர்ப்பமாக இருப்பதால், முடிந்தவரை வேறு சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது உங்கள் வயிற்றிலிருக்கிற கருவுக்கு நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒருவேளை சிறுநீரகக்கல்லால் உங்களுக்குத் தாங்க முடியாத வலி ஏற்பட்டால், அல்ட்ரா சவுண்ட் செய்து, யூரிட்டர் வழியாக மெல்லிய டியூபை உள்ளே செலுத்தி, அடைப்பை நீக்கிவிடுவோம். அந்தச் சிறுநீரகக்கல், சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும். எனவே, கவலை வேண்டாம்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.