நன்றி குங்குமம் டாக்டர்
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே தாகம், வியர்வை, வியர்குரு, மயக்கம் என நம் உடலை பாதிக்க ஆரம்பித்துவிடும். தாகம், வெப்பம், உடல் எரிச்சல் போன்றவற்றை இயற்கையான முறையில் எளிதில் சமாளிக்கலாம். அவ்வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகசத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின், மெக்னீசியம், சோடியம் போன்றவை அடங்கியுள்ளன.
உடலை குளிர்ச்சியூட்டும் முலாம்பழம் பல்வேறு நோய்களை தீர்க்கிறது. தோலை பளபளப்பாக்கும். முகத்திற்கு அழகைத்தரும். புத்துணர்ச்சியை தந்து உடலின் சத்துக் குறைபாட்டை நீக்கிவிடும். முலாம்பழத்தை உண்டு வர மலச்சிக்கல் நீங்கும். சிறுநீரகக் கோளாறுகள், நீர்க்கடுப்பு இவற்றை குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். சாப்பாட்டிற்கு பின் சாப்பிட செரிமானம் நன்கு செயல்படும்.
பழச்சதையை சீரகம், இஞ்சிச்சாறு, உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள், குடல் நோய்கள் குணமாகும். பழச்சாறு தாகத்தை தீர்த்து, தொண்டை வலியை குணப்படுத்தும். இருமல், ஆஸ்துமாவை விரட்டும் பழ சர்பத்தோடு இனிப்பு சேர்த்து, அருந்தி வர, சொறி, சிரங்கு மாறும்.
பழச்சாறு அல்லது பழத்தை அரைத்து தடவி வர தோல்நோய் குணமாகும். கோடைகால வெம்மை, தலைசூடு மாற முலாம்பழத்தை சாப்பிட்டு வரலாம்.விதைகளை பொடித்து உண்ண வயிற்றுப் புழுக்கள் அழியும். விதைகளை அரைத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மேல் பூசி வர கரும்புள்ளிகள் மாறும்.முலாம்பழம் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். கீல் வாதத்தைக் குணப்படுத்தும்.
முலாம்பழம் சர்பத் சாப்பிட கண் எரிச்சல், கண் சூடு மாறி கண் குளிர்ச்சி பெறும்.வெப்பத்தால் ஏற்படும் சிறுநீர் எரிச்சலை முலாம்பழம் குணப்படுத்தும்.இவ்வாறு பலவகைகளால் பயனளிக்கும் முலாம்பழத்தை சேர்த்துக் கொள்ள கோடையில் ஆரோக்கியம் காக்கலாம்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்
The post உடலை குளிர்விக்கும் முலாம்பழம்! appeared first on Dinakaran.