நன்றி குங்குமம் தோழி
மருத்துவ வளர்ச்சிகள் ஒருபக்கம் இருந்தாலும், நோய்களும் உடல் சார்ந்த சிக்கல்களும் இன்னொரு பக்கம் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன. அதில் முக்கியமாக பெண்கள் கருத்தரிக்க பாடுபடுவது, கர்ப்பிணிகளின் ஆரோக்கியம், பிரசவிப்பதில் இருக்கும் சிக்கல்களைச் சொல்லலாம். வலி கூட வராமல் பத்து நிமிடத்தில் சர்வ சாதாரணமாக குழந்தை பெற்ற கதை எல்லாம் இன்றைக்கு மாயமாகி, தொடர் அறுவை சிகிச்சைகளாக மாறிவிட்டன. எனினும் அறுவை சிகிச்சைக்கு சிலர் பயப்படுவதும், சுகப்பிரசவம் என்றால் சுலபமாக எண்ணுவதுமாக நிறைய கதைகளும், மூடநம்பிக்கைகளும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. இதில் எது சிறந்தது, எது சிக்கல் வாய்ந்தது என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
சுகப்பிரசவம்…
சுகப்பிரசவத்தில் குழந்தையை
எளிதாக வெளியே எடுப்பதற்காக
கொஞ்சமாக கருப்பை வாய் அருகே
கத்தியால் கிழிப்பார்கள். அதற்கு சிறு தையல்களும் இட்டு ஒரு மாதத்தில் முற்றிலும் ஆறிவிடும். அந்தத் தையலாலும், கிழித்ததாலும் பெரிதாய் எந்தவித
பாதிப்பும் இருக்காது. இதற்கு மயக்க
மருந்தும் கொடுக்க மாட்டார்கள்.
அறுவை சிகிச்சை…
அறுவை சிகிச்சையில் முதுகுத் தண்டுவடம் முதல் கால் வரை மரத்துப்போக மயக்க மருந்து அளிக்கப்படும். பின் ஒவ்வொரு அடுக்காக கிழித்து கர்ப்பப்பையை அடைவர். முதலில் தோல் (Skin), திசுப்படலம் (Fascia), கொழுப்பு சதை (Fat tissues), வயிற்று தசைகள் (Abdominal Muscles), பெரிட்டோனியம் (Peritoneum) எனும் வயிற்றுப்பை, கர்ப்பப்பை (Uterus) மற்றும் பனிக்குடப்பை (Amniotic sac) என கடந்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். பிறகு தையல் தைத்து காயத்தை மூடுவர்.
சாதகங்கள்…
சுகப்பிரசவம்
* குழந்தை பிறந்த அன்றே எழுந்து அமரமுடியும்.
* இயல்பு நிலைக்கு அடுத்த நாளே திரும்பிவிடலாம்.
* கருப்பை வாய் அருகில் மட்டுமே தையல் போடுவதால் எழுந்து அமர்வது, நடப்பது, குனிந்து நிமிர்வது என அனைத்தும் எளிதாக இருக்கும்.
* இயற்கையான பிரசவம் என்பதால் ஹார்மோன்கள் வழியாக (இயல்பான முறையில் இயற்கையாய்) உடல் எளிதாய் பழைய நிலைக்கு திரும்பும். அதாவது, தினசரி நாம் எப்படி சிறுநீர் வந்தால் கழிக்கிறோமோ அதுபோல இயல்பான ஒன்றாக மூளையில் பதிந்த ஒன்றுதான் சுகப்பிரசவம். ஆதலால், உடல் அதனை தன் வேளைகளில் ஒன்று என இயல்பாக்கும்.
* தினசரி வேலைகளுக்கு மற்றவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அறுவை சிகிச்சை
* சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து இறந்து போன கர்ப்பிணியின் உடலில் உள்ள சிசுவை காப்பாற்ற நினைத்து செய்ததுதான் முதல் (குழந்தை பிறப்பிற்கான) அறுவை சிகிச்சை. எனவே, தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டிய சூழல் இருப்பின் அறுவை சிகிச்சைதான் பக்கபலமான ஒன்று.
* பெரிய அளவு குழந்தை, குழந்தையின் தலை திரும்பவில்லை, குழந்தை திடீரென மலம் கழித்துவிட்டது என பல குழந்தை நலன் சார்ந்த சிக்கல்களுக்கு எளிதான தீர்வு அறுவை சிகிச்சை.
* அதீத ரத்த அழுத்தம், தாயின் இதயம் சுகப்பிரசவ வலியினை தாங்க முடியாமல் இருக்கும் நிலை, நஞ்சுக் கொடி கீழே இறங்கி இருத்தல் என பல தாய் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு எளிதான தீர்வு அறுவை சிகிச்சை.
பாதகங்கள்…
சுகப்பிரசவம்
* பாதகம் என எதுவும் இல்லை. ஆனால், பத்து சென்டி மீட்டர் வரை திறக்காமல் சிலருக்கு அதிகப்படியாக கிழிக்க வேண்டியிருக்கும்.
* சிலருக்கு குழந்தையின் தலை பாதிதான் வெளியே வந்திருக்கும். அதனால் ஒரு சில உபகரணங்கள் கொண்டு வெளியே எடுக்க நேரிடும்.
அறுவை சிகிச்சை
* வயிற்றில் ஏழு நிலைகளில் வெட்டப்படுவதால் வெளி காயம் குணமாக பத்து நாள் ஆகும்.
* தசைகளை வெட்டுவதால் மூன்று முதல் ஆறு மாதம் எடை எதுவும் தூக்கக் கூடாது.
* கீழே உட்கார்ந்து எழுவதை முதல் மூன்று மாதம் தவிர்க்க வேண்டும்.
* உள் காயம் ஆற குறைந்தது முன்று மாதம் ஆகும் என்பதால் உள்ளே போட்டுள்ள தையலில் கவனம் தேவை.
* முதல் மூன்று நாட்களுக்கு நம்மால் அதிகம் நடக்க, உட்கார முடியாது என்பதால், ரத்த ஓட்டம் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.
*முதல் ஒரு வாரம் நாம் தினசரி வேலைக்கு மற்றவரை சார்ந்து இருக்க வேண்டும்.
* மயக்க மருந்து ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் இருக்கும் என்பதால், தலை வலி, வாந்தி போன்ற விஷயங்கள் நிகழலாம்.
*வெகு சில பெண்களுக்கு மயக்க மருந்தின் பாதிப்பினால் பால் சுரக்க ஓரிரு நாட்கள் தாமதமாகலாம்.
இயன்முறை மருத்துவத்தின் பங்கு…
எந்த வழி பிரசவமாக இருந்தாலும் உடற்பயிற்சிகள் என்பது அவசியமாகிறது. குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பின் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகள் கற்றுக்கொண்டு வீட்டில் செய்து வர வேண்டும்.
சுகப்பிரசவம்
பத்து மாதம் ஓர் உயிரை வயிற்றில் சுமப்பதனால் வயிற்று தசைகள் பலவீனமாகவும், முதுகு தசைகள் இறுக்கமாகவும் இருக்கும். இதனை சரி செய்வது அவசியம். மேலும் ‘சிக்ஸ் பேக்’ என்று சொல்லப்படும் வயிற்று தசைகள் இரு பக்கத்திலும் அடுக்காக இருக்கும். இதனை நடு வயிற்றில் இணைத்து வைத்திருப்பது தசைகளின் நார்கள். நம் வயிறு விரிய விரிய இந்த மையப் பகுதி தசை நார்களும் விரியும். இதனால் சில பெண்களுக்கு மூன்று இன்ச்சுக்கு மேல் விரியலாம். இப்படி ஆகும் பட்சத்தில் அதனை உடற்பயிற்சிகள் கொண்டு சரி செய்தல் கட்டாயமாகும்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மயக்க மருந்தினால் முதுகு வலி வருவதில்லை. அறுவை சிகிச்சைக்கு நம் ஊர் பெண்கள் எடுத்துக் கொள்ளும் ஓய்வினால்தான் முதுகு வலி எளிதாய் வருகிறது. மேலே சொன்னது போல ஏற்கெனவே தசைகள் ஒரு பக்கம் பலவீனமாகவும், மறுபக்கம் இறுக்கமாகவும் இருப்பதால் இயல்பாகவே பெண்களுக்கு பிரசவம் முடிந்தபின் முதுகு வலி வருவது இயல்பு. மேலும் இதனைக் கூட்டும் வகையில் நம் வீட்டில் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை என்பதால் ஆறு மாதத்திற்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம் எனச் சொல்லி ஓய்வெடுக்கச் சொல்வர். இதனால் தசைகள் இன்னும் இன்னும் பலவீனமாகும். தசைகள் அறுவை சிகிச்சையில் வெட்டப்படுவதும் ஒரு பாதகமாக அமைகிறது.
இயன்முறை மருத்துவ அறிவுரைகள்…
* எந்தப் பிரசவமாக இருந்தாலும் மூன்று மாதங்களுக்கு மேல் உடற்பயிற்சிகள் தொடங்கலாம். ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் உடல் பலத்தை பொருத்து உடற்பயிற்சிகளும், அதன் எண்ணிக்கையும் மாறுபடும் என்பதால் பயம் கொள்ளத் தேவையில்லை.
* அறுவை சிகிச்சை செய்த பெண்களில் பலர் முதல் சில வாரங்களில் ஓய்வில் கிடைக்கும் சொகுசுக்கு பழகிவிடுவர். இதனால் எளிமையான நடைப்பயிற்சி செல்வது, சிறு வேலைகள் செய்வது என எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பர். இதனாலும் உடல்நலக் கேடுகள் வரும் என்பதால், அறுவை சிகிச்சையினை குறை சொல்லாமல் எப்போதும் உடல் உழைப்புடன்
இருப்பது அவசியம்.
* அறுவை சிகிச்சை செய்தால் முதல் மூன்று மாதங்களுக்கு கீழே அடிக்கடி அமர்தல் கூடாது. எனினும் ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு தடவை அமரலாம்.
* எந்தப் பிரசவமாக இருந்தாலும் முதல் ஒரு வருடம் கட்டாயம் அதிக எடைகள் தூக்கக் கூடாது. குடல் இறக்கம் (Hernia) பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். ஆகவே, தேவையின் அடிப்படையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து உடலியல் ரீதியாக எளிதில் மீள முடியும் என்பதை புரிந்துகொள்வோம். கூடவே, சுகப்பிரசவம் என்றாலும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
The post சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா? சிறப்புகளும், சிக்கல்களும்! appeared first on Dinakaran.