கோடை காலம் என்பதால் பிரச்னை இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

வேலூர், ஏப்.2: காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் காட்பாடி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 15 வது மத்திய நிதி குழு மானியத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II ல் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், கலைஞர் கனவு இல்லம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் குறித்தும் கேட்டறிந்தார்.

2024-25ம் நிதியாண்டில் 15வது மத்திய நிதிக்குழு மானியத்தில் ஒப்பளிக்கப்பட்டுள்ள பணிகளில் குடிநீர் பணிக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க உத்தரவிட்டு உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக பணிகளை தொடங்க அறிவுறுத்தினார். அடுத்த 3 மாதங்களுக்கு கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை வருகின்ற ஏப்ரல் மாதம் 10 தேதிக்குள் முடித்து அறிக்கையை அனுப்ப வேண்டும்.

நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அடுத்த வாரத்தில் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து திட்ட பணிகளையும் வரும் 10ம் தேதி மற்றும் 15ம் தேதிக்குள் முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் பிடிஓக்கள் நந்தகுமார், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காட்பாடி பிடிஓ அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார்.

The post கோடை காலம் என்பதால் பிரச்னை இல்லாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்: ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: