ரூ. 1.50 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுக்கு பின் மேலாளர் கைது

சேலம், ஏப்.2: சேலத்தில் பாக்கு வியாபாரத்தில் ₹1.50 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுக்கு பின் வாழப்பாடியை சேர்ந்த மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள குறிச்சி சன்னபுறாக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (68), பாக்கு வியாபாரி. இவர் தனது மகன் பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து, சேலம், ஈரோடு மாவட்டங்களில் பாக்கு மற்றும் தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து பாக்கு, இளநீர், தேங்காய் வெட்டி, வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெயராமன், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் ஈரோடு, கோபி, வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் பாக்கு மரங்களை குத்தகைக்கு எடுத்து, பாக்கு அறுவடை செய்து வியாபாரம் செய்து வருகிறேன். இந்த தொழிலுக்கு எனக்கு மேலாளர்களாக குறிச்சி கிராமத்தை சேர்ந்த கதிர்வேல், அவரது மகன் தினேஷ், கோபி பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) தெய்வசிகாமணி ஆகியோர் இருந்தனர்.

அவர்கள், பாக்கு அறுவடையின் போது கூலியாட்களுக்கு ஊதியம் கொடுத்ததுபோக மீதியுள்ள பாக்கு மூட்டைகளை விற்று கணக்கு காட்டி வந்தனர். அதில், தொடர்ந்து முறைகேடு செய்து, எனது பணத்தை சுருட்டிக்கொண்டனர். இந்தவகையில், அந்த 3 பேரும் ₹1,49,97,340ஐ மோசடி செய்துவிட்டனர். அந்த பணத்தை திருப்பி தராமல் கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர், எனக்கூறியிருந்தார்.

இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பாக்கு வியாபாரி ஜெயராமனிடம் ₹1.50 கோடி மோசடி செய்த கதிர்வேல், வெங்கட், தினேஷ் ஆகிய 3 பேர் மீதும் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, கூட்டுசதி, மோசடி, கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் 2 ஆண்டுக்கு பின் நேற்று, வாழப்பாடி குறிச்சியை சேர்ந்த தினேசை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ரூ. 1.50 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுக்கு பின் மேலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: