சேலம், ஏப். 2: கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்க, ஏற்காட்டில் 2 மாதங்களுக்கு கேம்ப் பயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்பட அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனையடுத்து வனத்துறை சார்பில் பல்வேறு முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, ஏற்காடு, கருமந்துறை, சேர்வராயன், பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்ராயன்மலை, கூடமலை உள்ளிட்ட காப்புக்காடுகள் அமைந்துள்ளன.
இந்த மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் வன தீ ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஏற்காட்டில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களுக்கு கேம்ப் பயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில், சேலம் மற்றும் ஆத்தூர் வனக் கோட்டப் பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வன தீ ஏற்படும் நிகழ்வுகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும் வகையில் வன பாதுகாவலர்கள், வன காவலர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து வனத் தீ கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடர் வனப்பகுதிகளில் வனத் தீ ஏற்படாதவாறு கண்காணிக்க, சேலம் வனக்கோட்டத்திற்கு 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆத்தூர் வனக் கோட்டத்திற்கு ஒரு ட்ரோன் கேமரா என மொத்தம் 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் தற்போது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வனப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றும் நிலை ஏற்படும் என்பதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்காட்டில் கேம்ப் பயருக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறுவோர் மீது பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்காடு, கருமந்துறை போன்ற மலைப்பகுதிகளுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது என வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும், கோடைகாலம் முடியும் வரை தொடர் ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வன பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலாப் பயணிகள், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ராஜன், (நிலம்) மயில், உதவி வனப் பாதுகாவலர் (பயிற்சி) கீர்த்தனா, துணை கலெக்டர் (பயிற்சி) மாருதி பிரியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவல் தெரிவிக்க ஏற்பாடு
ஏற்காடு மற்றும் கருமந்துறை ஆகிய 2 மலைப்பகுதிகளிலும் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஏற்காட்டிற்கு 73050 95785 மற்றும் கருமந்துறைக்கு 04292 244803, 75503 96101 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் இதனை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், பொது இடங்களில் காட்சிப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காட்டுத் தீ தொடர்பான தகவல்களை உடனடியாக 0427 2415097 மற்றும் 1800 599 0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலோ ெதாடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post ஏற்காட்டில் கேம்ப் பயருக்கு 2 மாதம் தடை appeared first on Dinakaran.