செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே இரு பேருந்துகள் திடீர் பழுது

 

செங்கல்பட்டு, ஏப். 2: செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் பழுதாகி சாலை ஓரம் நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம் வழியாக திட்டகுடி நோக்கி சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் நேற்று திடீரென பழுதாகி சாலை ஓரம் நின்றது.

இதில் பேருந்தில் இருந்த 20க்கும் அதிகமான பயணிகளை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்குள் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சிலையில் செங்கல்பட்டு அருகே ராஜகுளிபேட்டை பகுதியில் திடீரென பழுதாக சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டு வந்த சுமார் 15க்கும் அதிகமான பயணிகள் 20 நிமிடங்கள் மாற்று பேருந்துக்காக காத்திருந்த நிலையில் நடத்துனர் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதாகி நிற்பதால் பயணிகள் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே இரு பேருந்துகள் திடீர் பழுது appeared first on Dinakaran.

Related Stories: