ஏலச்சீட்டு நடத்தி வசூல்; ரூ.2.60 கோடி மோசடி: பாஜ தம்பதி கைது

கள்ளக்குறிச்சி: ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்த பாஜவை சேர்ந்த தம்பதியை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அண்ணாநகர் ஈ.பி காலனி பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(35). பாஜ மாவட்ட தரவு தள மேலாண்மை முன்னாள் துணை தலைவர். இவரது மனைவி சூரிய மகாலட்சுமி(35), பாஜ முன்னாள் நகர தலைவர். கடந்த 2017 முதல் தம்பதியரும், சூரியமகாலட்சுமியின் தாய் கிருஷ்ணகுமாரி, சகோதரர் மோகனரங்கன்(எ) பாலாஜி(43) ஆகியோரும் சேர்ந்து கடந்த 5 ஆண்டாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

இதில் கள்ளக்குறிச்சி ராஜாம்பாள் நகரை சேர்ந்த துரைராஜ் மனைவி கங்கா(38), கடந்த 2021ல் சேர்ந்துள்ளார். அப்போது உரிய நேரத்தில் பணத்தை திரும்ப கொடுக்கவே தொடர்ந்து கங்கா ரூ.4.25 லட்சம் சீட்டு கட்டியுள்ளார். மேலும் கங்காவிற்கு சொந்தமான கட்டிடத்தில் சூரியமகாலட்சுமி வாடகைக்கு அலுவலகம் நடத்தி வந்துள்ளார். அதற்கான வாடகை பாக்கி, மின் கட்டண தொகை ரூ.25 ஆயிரம் தர வேண்டும்.

இந்நிலையில் மாத சீட்டு நடத்தி வந்த சூரியமகாலட்சுமி, சீட்டு கட்டியவர்களுக்கு சரிவர பணத்தை திருப்பி கொடுக்காததால் அச்சமடைந்த கங்கா, தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் தராததால் கங்கா, கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாதார குற்ற பிரிவில் புகார் கொடுத்தார். புகாரில், கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 55 பேர் ரூ.2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 கட்டி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசார் சூரியமகாலட்சுமி, சிவக்குமார், கிருஷ்ணகுமாரி, பாலாஜி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவான பாஜ பிரமுகர்கள் சூரியமகாலட்சுமி, சிவக்குமார் ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகுமாரி, பாலாஜியை தேடி வருகின்றனர்.

The post ஏலச்சீட்டு நடத்தி வசூல்; ரூ.2.60 கோடி மோசடி: பாஜ தம்பதி கைது appeared first on Dinakaran.

Related Stories: