பல்லடம் அருகே பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டது உறுதியானது

பல்லடம்: பல்லடம் அருகே 22 வயது பெண்னை ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது. பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த வெண்மணி மற்றும் வித்யா 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், கல்லூரி மாணவி வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மகள் வித்யா(22). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் திருப்பூர் பகுதியை சேர்ந்த வென்மணி என்ற இளைஞரும், வித்யாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இளைஞர் வெண்மணி, வித்யாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பாதால் வித்யாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(30.3.2025) வித்யாவின் பெற்றோர் இருவரும் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ வித்யா மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சடலமாக கிடந்தார். ஆனால், அவரது பெற்றோர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு கூட எந்த தகவலும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் காதலர் வெண்மணி தனது காதலி வித்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வித்யாவின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யவும் போலீசார் முடிவு செய்தனர்.

இதனிடையே வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்தால் வித்யா ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தினர். விசாரணையில் தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் சரவணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

The post பல்லடம் அருகே பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டது உறுதியானது appeared first on Dinakaran.

Related Stories: