தினகரன் நாளிதழ்-சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

சென்னை: பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேரவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி இணைந்து சென்னையில் நடத்திய கல்வி கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்காக தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தினகரன் கல்வி கண்காட்சியை, தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி இணைந்து ஏற்பாடு செய்தன. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொடங்கியது. தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் முன்னிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சென்னை விஐடி சார்பு துணை வேந்தர் தியாகராஜன், ெரமோ கல்லூரி இயக்குநர் ரித்திக் பாலாஜி, ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி முதன்மை தொடர்பு அலுவலர் விவேக் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.

கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் அரங்குகள் அமைத்திருந்தன. கண்காட்சியை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்தனர். இந்த கண்காட்சியில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு, விமானப் பணி, டிரோன் தொடர்பான படிப்புகள் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வியாளர்கள், கல்லூரி பிரதிநிதிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கண்காட்சியின் கடைசி நாளான நேற்றும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவிலான கூட்டம் அலைமோதியது. பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்த மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கல்வியாளர்களிடம் கேட்டு விருப்ப பாடம், கல்லூரிகளை தேர்வு செய்து கொண்டனர். வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கான ஊக்கத்தொகைகள் குறித்த வழிமுறைகளும் சொல்லி கொடுக்கப்பட்டது. என்ன படித்தால் வெளிநாட்டில் வேலை பார்க்கலாம். அங்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதுதவிர கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், ஊக்கத்தொகை பெறுவது எப்படி, கட்டண சலுகைகள் பெறுவது எப்படி உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்கள் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டது. மேலும், பெற்றோர்களுக்கும் முறையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இதனால் எந்த ஒரு புரிதலும் இல்லாமல் வந்த தங்களுக்கு இந்த கண்காட்சி சிறந்த வழிகாட்டியாக இருந்தது என பெற்றோர்களும் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.மாணவர்கள் தங்கள் பள்ளி நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

நேரம் செல்ல செல்ல மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. எல்லா ஸ்டால்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்வி மட்டுமின்றி, மாணவர்கள் வங்கியில் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் எந்த ஒரு இன்னல்களும் இல்லாமல், உயர்க்கல்வி குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் கல்லூரி சார்ந்த விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டதாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

The post தினகரன் நாளிதழ்-சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: