சுற்றுலா பயணிகள் காரை விரட்டிய காட்டு யானை: வீடியோ வைரல்

ஊட்டி: ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற காரை காட்டு யானை விரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிகிறது. இதனால் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை ஊட்டியை நோக்கி காரில் சுற்றுலா பயணிகள் 4 பேர் கல்லட்டி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். 35வது கொண்டை ஊசி வளைவில் வரும்போது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை காரை துரத்தியது. இதனால் காரை வேகமாக திருப்பிய சுற்றுலா பயணிகள் மீண்டும் மசினகுடி நோக்கி சென்றனர்.

காரை துரத்தி வந்த காட்டு யானை சாலையில் முகாமிட்டதால் மலைப்பாதையில் பயணித்த அனைத்து வாகனங்களும் மசினகுடியை நோக்கி திரும்பி சென்றன. காட்டு யானை காரை துரத்தும் காட்சியை காரில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சுற்றுலா பயணிகள் காரை விரட்டிய காட்டு யானை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: