ஓசூர், மார்ச் 24: ஓசூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து போலீசார் முயற்சியால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
ஓசூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து- பாகலூர் செல்லும் சாலையின் இரு மடங்கிலும் சிறிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், மநகராட்சி அலுவலகமும் இந்த சாலையில் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த சாலையில் சுமார் 2 கி.மீ., தொலைவிற்கு பழுதாகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்கில் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மாநகராட்சி மேயர், ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் சென்று வருகின்றனர். ஆனால், பழுதடைந்த சாலையை சீரமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது. 35 மி.மீ., மழை பெய்த நிலையில், தழ்வான பகுதிகளில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியது. அதேபோல், பாகலூர் சாலையிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், நேற்று அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து சென்றனர். மேலும், வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலின்பேரில், ஓசூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சத்யா உள்ளிட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டு, கட்டுமான ஒப்பந்தாரர் உதவியுடன் சிமெண்ட் கலவையை டிப்பர் லாரியில் கொண்டு வந்து சாயைில் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கோபிநாத் எம்பி, பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் தொடர்பு கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஒரு நாள் மழைக்கே சேதமான சாலைகள் appeared first on Dinakaran.