சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், பாஜ தரப்பில் இருந்து கொடுக்கப்படும் நெருக்கடியுடன், டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அணிகள் இணைப்பு என்பதை மீண்டும், மீண்டும் கூறி நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர்.
அணிகள் இணைப்பு என்பதை கட்சியினர் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகவே அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பார்த்துவருகின்றனர். இது எடப்பாடிக்கு புரியும். எடப்பாடி தரப்பில் சரியான காயை எடுத்து வைக்காவிட்டால், பாஜ, டிடிவி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினர் இணைந்து செக் வைக்கவும் தயாராகி வருகின்றனர். இதற்கு முன்னோட்டமாகத்தான் மாநிலங்களவை தேர்தலை பார்க்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவை சேர்ந்த வில்சன், அப்துல்லா, சண்முகம் மற்றும் வைகோ, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது.
இந்த இடத்திற்கு புதிதாக 6 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் திமுக தரப்பில் இருந்து 4 பேரும், அதிமுக தரப்பில் இருந்து 2 பேரும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். திமுக தரப்பில் மீண்டும் 4 பேரை தேர்வு செய்யமுடியும். திமுக தரப்பு, சட்டமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி கூட்டணி கட்சிகளின் உதவியுடன் 4 பேரை தேர்வு செய்யமுடியும்.
மீதமுள்ள 2 பேரில் 2 இடத்தையும் அதிமுகவால் பெற முடியுமா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. 2 மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 68 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை. தற்போது அதிமுக தரப்பில் 65 பேர் மட்டுமே உள்ளனர். அதில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த இருவரும், செங்கோட்டையனும் அடக்கம். எடப்பாடி தரப்புக்கு எதிராக இவர்கள் இருந்தாலும், தேர்தல் என வரும் போது இவர்கள் எடப்பாடி தரப்பை தாமாக முன்வந்து ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இன்னும் 3 பேரின் ஆதரவு இருந்தால் தான் 2வது மாநிலங்களவை உறுப்பினரை அதிமுகவால் பெறமுடியும்.
அப்படி, 2வது மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக சார்பானவராக இருக்க வேண்டுமென எடப்பாடி தரப்பு நினைத்தால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, மாநிலங்களவை தேர்தலிலேயே பாஜ கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். அவர்களுடன் கூட்டணி வைத்தால், பாமக உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் பாஜ உறுப்பினர்கள் 4 பேரின் ஆதரவு கிடைக்கும். பாஜ மற்றும் பாமக ஆதரவு இன்றி 2வது மாநிலங்களவை உறுப்பினரை பெற முடியாது என்பதால் இவர்களின் ஆதரவு அதிமுகவிற்கு தேவைப்படுகிறது.
இந்த முடிவிற்கு வந்தால், மாநிலங்களவை தேர்தலைத் தொடர்ந்து அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜ கூட்டணி என்பது ஜூலை மாதத்திலேயே உறுதியாகிவிடும். இந்த முடிவை எடுக்காமல், 2வது மாநிலங்களவை உறுப்பினர் அதிமுகவிற்கு தேவையில்லை என நினைத்து 2வது வேட்பாளரை நிறுத்தாவிட்டால் மட்டுமே அதிமுக யாருடன் கூட்டணி சேரப்போகிறது என்ற குழப்பம் அரசியலில் தொடரும். அதேசமயம், இந்த முடிவை எடப்பாடி தரப்பு எடுத்தால், இதைத் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து வெளிவரும் எதிர்வினைகளையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிமுகவில் உறுதியாக உள்ள ஒரு ராஜ்யசபா சீட்டை பெற கட்சிக்குள்ளேயே பலரும் மோதி வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை என்பதால், ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்துள்ளது. இதனால், தென்மாவட்டத்தினருக்கு கொடுப்பதா அல்லது ெகாங்கு மண்டலத்திற்கே அந்த வாய்ப்பை தருவதா என்ற சிக்கலும் எடப்பாடி முன் உள்ளது.
போதாத குறைக்கு எடப்பாடியை நம்பி பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி இதுவரை அதிமுக கூட்டணியில் தொடர்ந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என பிரேமலதாவிடம் உறுதி கூறப்பட்டுள்ளது. இதை நம்பி எப்படியும் தனது கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் அதிமுக கூட்டணியை தொடர்ந்தார். தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என எப்போதும் கூறவில்லை என எடப்பாடி பகிரங்கமாக போட்டு உடைக்க மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகினார் பிரேமலதா.
இதனால், விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில் ‘சத்தியம் வெல்லும், நாளை நமதே’ என பதிவிட்டு தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா என கேள்வி எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை பிரேமலதா வெகுவாக பாராட்டினார். இதனால், ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவை நம்பி இருந்த தேமுதிகவும் மெல்ல விலகி, திமுகவை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம், அன்புமணி ராமதாசிற்கு பாஜ மூலம் எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிவிடலாம் என நினைத்திருந்த நிலையில் பாஜ தரப்போ நாசூக்காக அவரை கைகழுவி விட்டது. பாஜ கூட்டணியில் உள்ள பாமக வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதனால், கட்சித்தலைவர் ஜி.கே.மணி மூலமாக அதிமுகவுக்கு தூது அனுப்பப்பட்டது. அப்போது அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் மற்றொருவரை தேர்வு செய்ய கூடுதலாக 3 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாமகவுக்கு ஒரு சீட் கொடுத்து கூட்டணியிலும் இணைத்துக் கொள்ளலாம் என மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு எடப்பாடி ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் பாஜவின் கூட்டணியோடு இணையும் சூழல் ஏற்படும். இதேபோல், பாஜவும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தங்களது ஆதரவை அதிமுகவின் 2வது வேட்பாளருக்கு வழங்கினால் அவர் வெற்றி பெறக்கூடும்.
இதற்கான பலனை சட்டமன்ற தேர்தலில் சீட் எண்ணிக்கையை உயர்த்திக் கேட்பதன் மூலம் அந்தக் கட்சி அறுவடை செய்யப் பார்க்கும். அதிமுகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர மாநிலங்களவை தேர்தலை ஒரு ஆயுதமாக பயன்படுத்த பாஜ தரப்பும் தயாராகி வருகிறது. இப்படி இக்கட்டான சூழலில், அதிமுகவில் தன்னை மட்டுமே முன்னிறுத்தும் முடிவிற்கு எடப்பாடி வந்தால் 2வது வேட்பாளரை நிறுத்துவதை தவிர்த்து, கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கலாம்.
ஆனால், இப்படியொரு முடிவிற்கு வரவிடாமல் எடப்பாடிக்கு செக் வைக்கும் வகையிலான ஆட்டத்தை பாஜ தரப்பில் இருந்து டிடிவி, ஓபிஎஸ், சசிகலா மூலம் இப்போதே இணைப்பு, அதிருப்தி போன்ற விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, மாநிலங்களவை தேர்தலே எடப்பாடியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை முன்னிறுத்துவதோடு மட்டுமின்றி முடிவும் செய்யும். அரசியல் சதுரங்கத்தில் காயை எடுத்து ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவாரா அல்லது இருக்கும் இடத்தை விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத அளவிற்கு அவருக்கு செக் வைக்கப்படுமா என்பது ஜூலை மாதத்தில் வெளிச்சத்திற்கு வந்து விடும்.
* பாஜ மற்றும் பாமக ஆதரவு இன்றி 2வது மாநிலங்களவை உறுப்பினரை பெற முடியாது என்பதால் இவர்களின் ஆதரவு அதிமுகவிற்கு தேவைப்படுகிறது. 2வது மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக சார்பானவராக இருக்க வேண்டுமென எடப்பாடி தரப்பு நினைத்தால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, மாநிலங்களவை தேர்தலிலேயே பாஜ கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.
* 2 மாநிலங்களவை உறுப்பி னரை தேர்வு செய்ய 68 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை. தற்போது அதிமுக தரப்பில் 65 பேர் மட்டுமே உள்ளனர். அதில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த இருவரும், செங்கோட்டையனும் அடக்கம். இன்னும் 3 பேரின் ஆதரவு இருந்தால் தான் 2வது மாநிலங்களவை உறுப்பினரை அதிமுகவால் பெறமுடியும்.
The post சதுரங்க ஆட்டத்தில் பாஜ, பாமக, தேமுதிக கழுத்தை நெரிக்கும் மாநிலங்களவை தேர்தல்: முடிவெடுக்க முடியாமல் திணறும் எடப்பாடி: யாருக்கு யார் செக்? appeared first on Dinakaran.