முன்னாள் எஸ்.ஐ. ஜாஹீர் உசேன் கொலை வழக்கு.. தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்தது போலீஸ்!!

நெல்லை: நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்தது. நெல்லை மாநகர் டவுண் பகுதியில் காலை நேரத்தில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நிலத்தகராறு காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கொலை செய்த தவுஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவியை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி காவல் ஆணையர் செந்தில்குமார் இருவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரது உறவினர்கள் முன்வைத்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது சரிவர நடவடிக்கை எடுக்காத டவுண் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்தது. ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தவுஃபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்துப் பிடிக்கும் போது, போலீசாரை அவர் அரிவாளால் வெட்டியபோது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

The post முன்னாள் எஸ்.ஐ. ஜாஹீர் உசேன் கொலை வழக்கு.. தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்தது போலீஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: