பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு புவி உருண்டை, ஸ்மார்ட் பார்க்கிங் வசதி :சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு..

*சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.

*சென்னை மாநகராட்சியில் அனைத்து சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பக அறைகளின் அளவுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டு (AC) வசதிகள் செய்யப்படும்.

*பொது மக்கள் பயன்பாட்டிற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில், புதியதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி (Lift) வசதிகள் செய்யப்படும்.

*சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் புவியியல் பாடத்தினை எளிதாக கற்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் தலா ஒரு புவி உருண்டை (Globe) வீதம் 2,300 வகுப்பறைகளுக்கு ரூபாய் 39.10 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்

*மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.

*சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.

*பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 100 பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்பறைகளில் (LKG மற்றும் UKG) குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க ஏதுவாக அவ்வகுப்பறைகளின் சுவற்றில் வர்ணம் பூசுதல், விளக்கப்படங்கள், மரச்சாமான்கள் பொருத்துதல், வண்ணப்படங்கள் வரைதல், குழந்தைகள் அமர்வதற்காக பல வண்ணங்களில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

*மண்டலம் 1,2,3,4,5,7,8. 11, 13 மற்றும் 14 ஆகிய பத்து மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதலாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.

*பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வட சென்னையில் மூலக்கொத்தளம் மயான பூமியில், இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

*சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் என 19 மருத்துவமனைகளுக்கும் தலா ஒன்று வீதம் 19 கிருமிநாசினி புகைக்கருவிகள் (Fogger Machine) தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடமிருந்து (TNMSC) கொள்முதல் செய்யப்படும்.

*சென்னை மாநகராட்சியில் உட்புறச் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளின் ஓரங்களில் படிந்துள்ள மண் துகள்கள் மற்றும் குப்பைகளை போக்குவரத்திற்கு இடையூறின்றி பெருக்கி, உறிஞ்சியெடுத்து சுத்தம் செய்யக்கூடிய வாகனம் (Ride on sweeping cum suction vehicle), 20 வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்

*சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி ஏற்படுத்தப்படும். இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும்

*சென்னை மாநகராட்சியை குப்பையில்லா தூய்மையான நகரமாக மாற்றுவது அவசியமாகிறது. இதனால் குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணித்திட கூடுதலாக 400 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால் வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும்

*மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளின் ஒவ்வொரு வாடகைதாரருக்கும் தனித்தனியாக வாடகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்துவதற்கு ஏதுவாக QR Code அச்சிட்ட அட்டைகள் அந்தந்த கடைகளில் பொருத்தப்படும். இதனைப் பயன்படுத்தி வாடகைதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக உரிய வாடகையை நேரடியாக காலதாமதமின்றி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்

*மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலை கொண்ட உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) ஏற்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக வரும் நிதி ஆண்டில் இரண்டு இடங்களில் செயல்படுத்தப்படும்

*சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 எண்ணிக்கையிலான பூங்காக்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பூங்காவின் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் (Reading zone) அமைக்கப்படும்

*சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கீழ்காணும் 10 பெரிய பூங்காக்களைத் தேர்வு செய்து அனைத்து வகையான பார்வையாளர்களும். முக்கியமாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்தப்படும்

*சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வட சென்னைப் பகுதி வாழ் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் மண்டலம்-2, வார்டு 16ல் ஆண்டார் குப்பம் ஏலந்தார். சடையன்குப்பம் பர்மா நகர் ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக இறகுப் பந்து உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.

*சென்னை மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 10 இடங்களைத் தேர்வு செய்து, அங்கு மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீருற்றுகள் அமைக்கப்படும்.

*குப்பை கொட்டும் வளாகத்தில் நெகிழிகளை கொட்டுவதைத் தவிர்க்க ஏற்கனவே, ஐந்து மண்டலங்களில் தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் (Plastic Baling Centre) இயங்கி வருகின்றன. மேலும், இப்பணிகள் இதர 10 மண்டலங்களில் (மண்டலம் 13,4,8,9,10,11,12,13 மற்றும் 15) தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் அமைக்கப்படும்.

The post பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு புவி உருண்டை, ஸ்மார்ட் பார்க்கிங் வசதி :சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: