தங்கக் கடத்தல் வழக்கில் என்னை கைது செய்யக் கூடாது: நடிகையின் கணவர் கோர்ட்டில் மனு

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் என்னை கைது செய்யக் கூடாது என்று நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கி கைது செய்யப்பட்டார். அவ‌ரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.

ரன்யா ராவுடன் தொடர்புடைய நட்சத்திர விடுதி உரிமையாளர் தருண் ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். சிறப்பு புலனாய்வு மற்றுமின்றி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர். ஜாமீன் கோரி பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் ரன்யா ராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த‌தால், தற்போது பெங்களூரு மத்திய சிறையில் ரன்யா ராவ் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது எனக்கூறி அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், ‘ரன்யா ராவுக்கும், ஜதின் ஹுக்கேரிக்கும் கடந்த நவம்பரில் திருமணம் நடந்தது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் டிசம்பர் முதல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பிரிந்து வாழ்கிறோம்.

சொல்லப் போனால் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் இருவரும் பிரிந்து விட்டோம். எனவே எனக்கும், அவரது தங்கக் கடத்தல் விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுக்கேரிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தனது முந்தைய உத்தரவுகளை பிறப்பித்த உயர் நீதிமன்றம், வரும் 24ம் தேதி அடுத்த விசாரணை நடக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

 

The post தங்கக் கடத்தல் வழக்கில் என்னை கைது செய்யக் கூடாது: நடிகையின் கணவர் கோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Related Stories: