இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது: திருமாவளவன் பேச்சு

சென்னை: இருமொழி கொள்கையை வைத்துதான் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஒன்று கூடுவோம் வென்று காட்டுவொம், இணக்கமாய் நின்று காட்டுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராகவன் தெருவில் ேநற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமை வகித்தார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன், மேயர் பிரியா, பகுதி செயலாளர் நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், காங்கிரஸ் மேற்கு மாவட்ட கமிட்டி தலைவர் டில்லிபாபு கலந்துகொண்டனர்.

இதில், விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். கலைஞர் 8 அடி பாய்ந்தால் மு.க.ஸ்டாலின் 80 அடி பாய்கிறார். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் என பேராற்றல் பெற்ற தலைவர்களுடன் இருந்து அரசியல் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதனால்தான் கலைஞரைவிட ஸ்டாலின் அபாயகரமானவர் என ஒரு பாஜ தலைவர் கூறினார். கல்வி நிதியை நீ தரவேண்டாம் நானே சமாளித்து கொள்கிறேன் என தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர். பத்தாயிரம் கோடி தந்தாலும் பணியமாட்டோம் என்ற கலைஞரின் துணிச்சலுடன் செயல்படுகிறார். இருமொழி கொள்கையை மட்டும் ஏற்போம் என்பதில் காட்டும் உறுதி பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நம்முடன் உள்ளனர் என்பதை காட்டுகிறது.

இந்தியை தேவாமிர்த மொழி என்பது போல சிலர் பேசுகின்றனர். இருமொழி கொள்கையை வைத்துதான் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் வட மாநிலத்தவர் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். இந்தியை படிக்காததால் தமிழ்நாடு பின் தங்கிவிட்டது என ஆதாரத்தை காட்ட முடியுமா, இந்திக்கும் வேலைவாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. இந்தியை படித்துதான் சுந்தர் பிச்சை உயர்ந்த இடத்திற்கு போனாரா, இந்தியா முழுவதும் ஒற்றை மொழியாக இந்தியை உருவாக்குவதே நாக்பூர் ஆர்எஸ்எஸ் நோக்கம்.

தமிழ்நாட்டு அரசியலில் எந்த ஆதாரமும் இல்லாமல் கலைஞரை எதிர்ப்பதே மிக முக்கிய அரசியலாக வைத்திருந்தனர். அனைத்தையும் தாண்டி 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிமிர்ந்து நின்றவர் கலைஞர். கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித் துறையை ஏவி அச்சுறுத்தினாலும் பணத்தை தராவிட்டாலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என உறுதியுடன் உள்ளார் நம் முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.

The post இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: