இக்கூட்டத்தில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தை பொறுத்தவரை, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்படாமல் இருந்தால்தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்படுகிற நியாயமற்ற ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்க முடியும். இல்லையென்றுச் சொன்னால் வடக்கு, தெற்கு என்றும், இந்தி பேசுகிற மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும் என இந்த கூட்டம் ஒன்றிய அரசை எச்சரிக்கிறது. தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநருக்கோ, ஒன்றிய பாஜக அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி ஆளுநர் ஆர்.என். ரவியும், பாஜவினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி: பாஜவுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் கட்சிகள் காலப்போக்கில் காணாமல் போய் விடும். கூட்டணி கட்சிகளையும் பாஜக அழித்து விடும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் கர்நாடகா துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு பாஜ சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளனர். முதலில் ஒன்றிய பாஜ ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்ததை நிறைவேற்றட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கச்சத்தீவை பற்றி ஆளுநர் ரவியும் பாஜவினரும் பொது வெளியில் பிதற்றாமல் இருக்க வேண்டும்: காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கடும் கண்டனம் appeared first on Dinakaran.