நிலவுக்கு ரோபோக்கள் அனுப்பி வைக்கப்படும் ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து சந்திரயான்-5 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் மூலம் மனிதர்கள் இல்லாமல் ரோபோக்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது: இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதியன்று விண்வெளியில் நாம் இரண்டு செயற்கைகோள்களை அனுப்பினோம். அவற்றை டாக்கிங் என்ற முறையில் செயற்கைக்கோள்களை ஒன்றாக சேர்த்து, தற்போது வெற்றிகரமாக இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பரிசோதனை மேற்கொண்டு வெற்றி கண்டதில் இந்தியா 4வது நாடாகும். 9,800 கிலோ எடை கொண்ட சந்திரயான்- 4 செயற்கைக்கோள் விண்ணில் அனுப்பப்பட இருக்கிறது.

அதனை இரண்டு ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி வைத்து, நிலவில் தரையிறங்க செய்து, அங்குள்ள கனிமங்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வருங்காலத்தில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, ஆளில்லா சிறிய சிறிய ராக்கெட்டுகள் தயாரித்து, அதில் ரோபோக்கள் அனுப்பி சோதனை நடத்தப்பட உள்ளது. ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்து சந்திரயான்-5 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் மூலம் மனிதர்கள் இல்லாமல் ரோபோக்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும். மகேந்திரகிரியில் அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகள் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகள் நடக்கிறது. அதன் மூலம் பல சாதனைகள் படைப்போம்.

விண்ணில் உள்ள வெப்ப நிலைகள் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தில் ‘நாசி ப்ரொடெக்டிவ் சிஸ்டம்’ சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது. செவ்வாய் கோளுக்கு மார்ஸ் ஆர்பிட் மிஷன் மூலம் அனுப்பப்பட்ட விண்கலம் 68 கோடி கிலோமீட்டர் தூரம் பயணித்து 294 நாட்கள் கழித்து அதில் உள்ள எந்திரங்களை செயல்பட செய்தோம். அது வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதை தொடர்ந்து உலகில் முதன்முதலில் பரிசோதனையில் வெற்றி கண்டது இந்தியா தான் என்ற பெருமை உள்ளது. வேறு எந்த நாட்டிற்கும் இந்த பெருமை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நிலவுக்கு ரோபோக்கள் அனுப்பி வைக்கப்படும் ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: