இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான லோகோவை சமூக இணைய தளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட சிலர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த லோகோவில் இருந்த ‘ரூ’ என்ற எழுத்துதான் இதற்கெல்லாம் காரணம். ரூபாயின் குறியீடான ₹ஐ தமிழ்நாடு முதல்வர் அவமதித்துவிட்டார். இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தும் என்று அலறினார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே ‘ரூ’ என்று வைத்திருந்தோம். தமிழ் பிடிக்காதவர்கள் இதை பிரச்னை ஆக்குகின்றனர். கல்விநிதி உட்பட 100 கோரிக்கைகளுக்கு வாய் திறக்காத ஒன்றிய நிதியமைச்சர் இது பற்றி பேசியிருக்கிறார் என்று கூலாக பதிலளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் டெல்லி தலைவர்கள் வரை அலற வைத்த ரூ மாற்றமும், ரூபாய் உருவான வரலாறும், அது கடந்து வந்த பாதையும் இதோ:
ரூபாயின் தந்தை: இந்தியாவில் பண்டைய காலம் துவங்கி ஏதோ ஒரு நாணயம் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், ரூபாயின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஷெர் ஷா சூரி. ஆப்கான் சுல்தானான இவர் டெல்லியை சில காலம் ஆண்டார். 485 ஆண்டுகளுக்கு முன் 1540 முதல் ஐந்து ஆண்டுகள் மட்டுமே சூரி பேரரசு இருந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் வெள்ளி நாணயத்தை வெளியிட்டு ருப்பியா என்று பெயரும் கொடுத்து அதற்கென தனி உருவத்தையும் கொடுத்தார் ஷெர்ஷா சூரி.
பெயர் காரணம்: ஆப்கானில் இருந்து வந்த முஸ்லிம் மன்னராக இருந்தாலும், உருது அல்லது அரபி மொழியில் பெயர் சூட்டவில்லை ஷெர்ஷா சூரி. தனது மொழியை திணிக்கவும் விரும்பவில்லை. சமஸ்கிருதத்தில் வெள்ளி அச்சு/ காசுக்கு ரூப்யா/ ரூபா என்பது பெயர். வெள்ளியில் நாணயம் வெளியிட்டதால் அதையே பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் சூரி. அன்று உருவான ரூப்பியா தான் இன்றைய ரூபாயின் துவக்கப் புள்ளி.
ரூபாயின் எடை: ஷெர்ஷா ஆட்சிக்காலத்தில் முதலில் வெள்ளியில் ரூப்பியா நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு நாணயமும் வட்ட வடிவில் இருக்க வேண்டும் என்றும் அது என்ன அளவில், எடையில் இருக்க வேண்டும் என்பதையும் ஷெர்ஷா சூரி நிர்ணயித்தார். இதன்படி, ஒரு தோலா (11.66 கிராம்) எடை கொண்ட வட்ட வடிவிலான வெள்ளி ரூபாய் நாணயங்கள் உருவாக்கப்பட்டது.
சில்லரை காசுகள்: இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு பெரிய மதிப்பில்லாமல் இருக்கலாம். ஆனால், 485 ஆண்டுகளுக்கு முன் அதன் மதிப்பு எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும். ரூபாய் மட்டும் போதாதே. சில்லரை காசுகளும் வேண்டுமே? அதற்கும் ஒரு வழி செய்தார் ஷெர்ஷா சூரி. செம்பில் தயாரிக்கப்பட்ட தம்பிடிகளையும் அறிமுகம் செய்தார். 40 தம்பிடிகள் ஒரு ரூபாய்க்கு சமம் என்றும் அறிவித்தார். ஒவ்வொரு தம்பிடியும் 20 கிராம் செம்பில் தயாரிக்கப்பட்டது.
எங்கு தயாரிக்கப்பட்டது?: அவரது ஆளுகைகளின் கீழ் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே நாணயம் தயாரிக்கும் ஆலைகளை துவங்கினார் ஷெர்ஷா சூரி.
பயன்பாடு: ரூபாய், தம்பிடி தயாராகிவிட்டது. ரூபாய் என்றால் என்னவென்றே தெரியாத மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பது. அதற்கும் வழி செய்தார் ஷெர்ஷா சூரி. டெல்லி சுல்தான் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் எல்லாம் அதுவரை பண்ட மாற்று முறையில்தான் வணிகம் நடந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூரி. ரூபாய், தம்பிடி நாணயங்கள் அடிப்படையில்தான் வணிகம் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக ரூபாயின் பயன்பாடு அதிகரித்தது.
வலுப்படுத்திய முகலாயர்கள்: ஷெர்ஷா சூரி 1545ல் மரணமடைந்த நிலையில் அவரது மகன் இஸ்லாம் ஷா சூரி, மன்னர் பொறுப்பை ஏற்று அடுத்த 9 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தந்தையை போலவே இவரும் ரூபாய் நாணயங்களை வெளியிட்டார். அவரது மறைவுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் முகலாயர் கை ஓங்கியது. 1556ல் முகலாய பேரரசர் அக்பர் முடிசூடினார். இவரது ஆட்சி காலத்தில் எடுத்த நடவடிக்கைகள்தான் ரூபாயை இன்றுவரை நாம் பயன்படுத்துவதற்கு காரணம். மேற்கே தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் முதல் கிழக்கே உள்ள சிட்டகாங் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே தக்காண பீட பூமிவரை அக்பர் தனது ஆட்சியை விரிவுபடுத்தினார். தன் ஆட்சிப்பகுதி முழுமைக்கும் ரூபாயை கொண்டு சென்றது அக்பர்தான். பல புதிய நாணய ஆலைகளை துவங்கியதும் அக்பர்தான். வெள்ளி நாணயத்தில் ரூப்பியா என்று அச்சு பொறிக்கப்பட்டதும் அக்பர் ஆட்சி காலத்தில்தான்.
ஐரோப்பியர்களின் பங்கு: 16ம் நூற்றாண்டில் வணிகம் செய்ய இந்தியா வந்த ஐரோப்பியர்களை முகலாயர்கள் அச்சிட்ட ரூபாய் கவர்ந்தது. இந்தியாவில் இருந்து வாசனை பொருட்கள், ஜவுளி, நவரத்தினங்கள் வாங்க அவர்களுக்கு தேவை ரூபாய். இதனால், ஆங்கிலேயர், டச், டேனிஷ், பிரெஞ்சு வணிகர்கள் தங்கள் நாட்டில் இருந்து ஏராளமான வெள்ளியை கொண்டு வந்து அதை இந்தியாவில் ரூபாய் நாணயங்களாக மாற்றி வணிகம் செய்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தங்கள் நாட்டின் பவுண்ட் ஸ்டெர்லிங்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. 17, 18ம் நூற்றாண்டுகளில் தங்கள் காலனியாக இருந்த இலங்கை, இந்தோனேசியாவிலும் ரூபாயை அறிமுகப்படுத்திய ஐரோப்பியர், ரூபாயை ஒரு வர்த்தக நாணயமாக மாற்றியதோடு, பல நாடுகளுக்கும் கொண்டு சென்றனர். அந்தந்த நாடுகளில் ஐரோப்பியர்கள் ரூபாய் நாணயங்களை தயாரித்தபோதும் அதில் முகலாயர்களின் முத்திரையை மாற்றவில்லை. 1858ல் இந்தியா முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிரிட்டிஷார், ஜார்ஜ் மன்னர் உருவம் பொறித்த நாணயங்களை கொண்டு வந்தனர். 1947ல் இந்தியா விடுதலைபெற்ற பிறகு, வெளியிடப்பட்ட நாணயங்களில் மன்னர் உருவத்துக்கு பதில் சாரநாத்தில் உள்ள சிங்கத்துடன் கூடிய அசோகர் தூண் உருவம் பொறிக்கப்பட்டது.
ஆப்ரிக்காவில் பரவிய ரூபாய்: 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் வர்த்தகத்தை பெருக்க, காலனி நாடுகளாக இருந்த ஆப்ரிக்க நாடுகளிலும் ரூபாயை இறக்கின. இப்படி, கிழக்கு ஆப்ரிக்க கடலோரத்தில் உள்ள நாடுகள், புதிதாக உருவான ஜெர்மன் காலனிகள், பிரிட்டிஷ் கிழக்கு ஆப்ரிக்கா, இத்தாலிய சோமாலிலாந்து, போர்ச்சுகீசிய மொசாம்பிக், அவரவர் ரூபாய் நாணயத்தை வெளியிட்டன.
அரபு நாடுகளில்…: ஆங்கிலேயர் அரபு ஷேக்குகளுடன் ஒப்பந்தம் செய்ததைதொடர்ந்து, குவைத், பக்ரைன், கத்தார், ஓமன், இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு முன்னோடியான ட்ருஷியல் நாடுகளிலும் இந்திய ரூபாய் கால்பதித்தது. இந்த நடைமுறை இந்தியா விடுதலை பெற்ற பிறகும் தொடர்ந்தது. 1956ல், இந்திய ரிசர்வ் வங்கி வளைகுடா நாடுகளுக்காக தனி ரூபாய் நோட்டுக்களையே அச்சிட்டது. ஆனால், 1960களில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய அதுவரை அதை பயன்படுத்திய அரபு நாடுகள் தங்கள் நாடுகளுக்கென தனி நாணயத்தை உருவாக்கின. ஆனாலும் 1972வரை ஓமனில் மட்டும் இந்திய ரூபாய் பயன்பாட்டில் இருந்தது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி.
குறியீடு பிறந்த கதை: இந்திய கரன்சிக்கு ரூபாய் என்று பெயரிடப்பட்ட போதும் அதற்கென தனி உருவக் குறியீடு இல்லை. ஆங்கிலத்தில் Rs. என்றும் தமிழில் ரூ என்றும் அதே போல இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் ரூபாயின் முதல் எழுத்து அடிப்படையில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான் 2009ல் இந்திய நாணயத்துக்கு சிறப்பு குறியீடு உருவாக்க கிராபிக் வடிவமைப்பாளர்களுக்கு சிறப்பு போட்டி ஒன்றை அறிவித்தது இந்திய அரசு. அதில் தமிழரான உதயகுமார் என்பவர் உருவாக்கிய குறியீடு தேர்வானது. இந்தி உள்ளிட்ட மொழிகளின் எழுத்து வடிவத்துக்கு பயன்படுத்தப்படும் தேவநாகரியின் ரூ.வை அடிப்படையாக கொண்டு அந்த குறியீடு உருவாக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு 2011 முதல் அச்சிடப்பட்ட நோட்டுகளிலும், நாணயங்களிலும் இந்த புதிய குறியீடு பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்களும் அதை பயன்படுத்த துவங்கினர்.
என்னதான் பிரச்னை?: இன்றைக்கு ரூபாய் குறியீடுக்கு பதிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. என்ற தமிழ் எழுத்து குறியீட்டை பயன்படுத்தியதை ஒன்றிய பாஜ ஆட்சியாளர்கள் பெரிய சர்ச்சை ஆக்கி உள்ளனர்.
ரூபாய்க்கான குறியீடு பயன்பாட்டுக்கு வந்து கிட்டதட்ட 16 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், இன்னமும் நாட்டின் பல பகுதிகளில், தங்கள் மொழியில் இதுவரை பயன்படுத்தி வந்த எழுத்தையே குறியீடாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, சர்ச்சை கிளப்பிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே பல முறை டிவிட்டர் சமுக வலைதளத்தில், ரூபாயை ரூ. என்றே குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு ஏன்? பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதல்வர் அலுவலகமே ரூபாயை குஜராத்தி மொழி ரூ.வை பயன்படுத்தி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அதையே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்ய அதை ஊதிப் பெருக்கி பிரச்னையாக்க முயற்சிக்கிறது பாஜ. இதற்கு பாஜ தலைமைக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் உள்ள ஒவ்வாமைதான் காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய கல்வி கொள்கையை புகுத்தி தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகி போன விரக்தியின் உச்சத்தில் ஒன்றிய அரசு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. பட்ஜெட் லோகோவில் ரூவை போட்டு, மொழிக்கொள்கையில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என்பதை பறைசாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
The post எங்கிருந்து வந்தது இந்திய ரூபாய்? முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட ரூ.வால் பாஜ அலறுவது ஏன்? குஜராத் முதல்வர் மட்டும் குஜராத்தியில் போட்டால் பிரச்னையில்லையா? appeared first on Dinakaran.