அரசு தலைமைச்செயலாளர் எச்சரிக்கை அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது

சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் இணைந்த ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதிய பங்களிப்பு ஊதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், பணிக் கொடை உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை முக்கியமான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தி்ல் ஈடுபடவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் தரப்பில் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து, பணிக்கு வராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் சங்கங்களுக்கு ஒரு அறிவிப்பை தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அல்லது போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். எனவே, பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது. மருத்துவ விடுப்பு தவிர சாதாரண விடுப்போ மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுவோர், பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார். இதையடுத்து பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தை 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

The post அரசு தலைமைச்செயலாளர் எச்சரிக்கை அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது appeared first on Dinakaran.

Related Stories: