வடலூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

 

வடலூர், மார்ச் 14: வடலூர் நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர் பேக்குகள் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாகவும் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், ஆணையாளர் ரஞ்சிதா தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கடலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், கரண்டிகள் போன்ற பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து நெய்வேலி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் என மொத்தமாக 500 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் விற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து துணிப்பை மற்றும் சணல் பையை பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

The post வடலூர் நகராட்சியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: