கடையம், மார்ச் 14: கடையம் அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரப் பகுதிகளில் இரை தேடி வருவது வழக்கம். இந்நிலையில் கடையம் அடுத்த மந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு நேற்று காலை விவசாய பணிகளை மேற்கொள்ள சென்றார்.
அப்போது அங்குள்ள கிணற்றில் தவறிவிழுந்த கடமான் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து பதறிய அவர் கடையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவின் பேரில் விரைந்துவந்த வேட்டை தடுப்பு காவலர்களும், வனத்துறையினரும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கடமானை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் உணவுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கடமான் தவறி கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது.
The post கடையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.