பாவங்களை போக்கும் மாசி மகம்

மாசி மகம் – 12.3.2025

1. முன்னுரை

கும்ப மாதம் என்று வழங்கப்படும் மகத்தான மாசி மாதத்தில் பற்பல உற்சவங்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. சில உற்சவங்கள் பௌர்ணமியை ஒட்டியும், சில உற்சவங்கள் அமாவாசையை ஒட்டியும் சிறப்பாக அனுசரிக்கப்படும். அந்த வகையில் மாசி மாத அமாவாசை ஒட்டி முதல் நாள் மகா சிவராத்திரி உற்சவமும் அமாவாசை அன்று அங்காளபரமேஸ்வரி போன்ற அம்மன் கோயில்களில் மயான கொள்ளை உற்சவமும் சிறப்பாக நடைபெறும். முழுநிலவு நாளான பௌர்ணமி நாளில் எல்லா ஆலயங்களிலும் தீர்த்தவாரி எனப்படும் மாசி மக உற்சவம் நடைபெறும். சில ஆலயங்களில் மாசி மகத்தை ஒட்டி பெருவிழாவாகக் (10 நாள் பிரம்மோற்சவம்) கொண்டாடப்படும். மாசி மகத்தின் சிறப்பினை முத்துக்கள் முப்பது தொகுப்பில் காண்போம்.

2. மாசி மாதத்தின் பெருமை

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும். மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது சிறப்பு.

மாசி மாதத்தில் கிரகப் பிரவேசம் அல்லது வீடு குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர். மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது. காரடையான் நோன்பு என்று இதைக் கொண்டாடுவார்கள்.

3. மக நட்சத்திரத்தின் பெருமை

மக நட்சத்திரத்தை ‘‘பித்ருதேவ நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ரு தேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம்.

4. மாசி மகமும் மகாமகமும்

கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகமாகக் கொண்டாடப்படுகிறது. இதே மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு முறை நிகழும் மஹாமஹம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் பிரசித்தமானது. அன்று ஸ்னானம், தானம் விசேஷமானது. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி பிராம்மணர்களுக்கு கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக் கருதப்படுகிறது.

5. கடலாடு விழா

சங்ககாலத்தில் இறை திருமேனிகளை நீர்நிலைகளில் நீராட்டும் வழக்கத்தின் தொடர்ச்சியாக நீரணி விழவு என்ற பெயரில் கொண்டாடப்பட்டதே மாசிமகமாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும் இவ்விழா கொண்டாடியது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன…! ஏழு நாட்கள் கொண்டாடப்பட்ட இவ்விழாவின் ஏழாவது நாள் இறை திருமேனிகளை நீராட்டியுள்ளனர். புறநானூற்றில் முந்நீர் விழவு என்று அழைக்கப்படும் இப்பண்டிகையை, ‘‘மாசிக் கடலாட்டு கண்டான்” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். முதலாம் ராஜராஜன், வரகுண பாண்டியன், ஆய் மன்னர்கள், இராஜேந்திரச் சோழனின் காலத்திலும் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபம் எடுத்த செய்தியும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது!

6. வருணனும் மாசி மகமும்

முன்பு ஒருகாலத்தில் வருண பகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருண பகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசி மகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

7. சிவபெருமானும் மாசிமகமும்

சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் வள்ளாள மகாராஜாவுக்கு நீத்தார் கடன் செய்யும் சடங்கு மாசிமகத்தன்று நடைபெறும். பிள்ளைப் பேறில்லாத மகாராஜாவுக்கு ஈசனே மகனாக எழுந்தருளி, மேளதாளமில்லாமல் பள்ளி கொண்டாபட்டிலுள்ள கௌதம நதிக் கரைக்குச் சென்று இந்தக் கடன்களை நிறைவு செய்துவருவது வழக்கம்.

மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான். திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் காமதகன நிகழ்ச்சியே மாசி மக சிறப்பாகும். அன்றைய தினம் ஈசன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுவர். திருவாஞ்சியம் தீர்த்தக் குளத்திற்கு குப்த கங்கை என்று பெயர். கங்கை தன் 999 கலைகளை இக்குளத்தில் கரைத்துவிட்டு மீதி ஒரு கலையைத்தான் கங்கை நதியில் கரைத்தாளாம். இத்தகைய சிறப்பு மிகுந்த தெப்பக் குளத்தில் வாஞ்சி நாதர் தெப்பவிழா கண்டபின் எமவாகனத்தில் உலாவருவார்.

8. பார்வதி தேவியும் மாசி மகமும்

ஒருமுறை பார்வதி தேவி சிவனின் கோபத்தினால் பூமியில் அவதரிக்க நேரிட்டது. அதே சமயம் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். தக்கன் தவத்தை ஏற்ற சிவன் ‘‘உனக்கு மகளாக பார்வதிதேவி தோன்றுவாள். நீ அவளை வளர்த்து வரலாம். தக்க காலத்தில் நாம் பார்வதி தேவியை மணம் முடிப்போம்” என்றார். பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. இப்படி அம்பிகை வலம்புரி சங்காகக் கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான்.

9. முருகனும் மாசி மகமும்

மக நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாகும். அன்று விரதமிருந்து முருகனை வழிபடுபவர்களின் பிறவிப்பிணி தீரும். மாசிமகத்தன்று நடைபெறும் பூண்டி முருகன் தேர்த்திருவிழா பிரசித்தமானது. முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்ததும் மாசி மக நாளில்தான். சுவாமிமலையில் மாசிமகத்தன்று இந்நிகழ்வு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் வள்ளியை மணந்து கொண்டது மாசி மாத பூச நட்சத்திர நாளில். அதனால் மாசி மாதம் மாங்கல்ய மாதமாக திருமணத்திற்கு உகந்ததாகத் திகழ்கிறது. மாசிமாத சுக்ல பஞ்சமி அன்று ஞானதேவதையான சரஸ்வதியை நறுமண மலர்களால் அர்ச்சித்து, தூபதீப நைவேத்தியம் செய்து வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

10. பெருமாளும் மாசி மகமும்

பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது. மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். சொந்த வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் வராகப் பெருமாளை வழிபாடு செய்யலாம்.

11. காரைக்கால் அம்மையாரும் மாசிமகமும்

கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனிதவதி என்ற காரைக்கால் அம்மையார், ‘‘இறைவா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!’ என்று வேண்டிப் பெற்றவர். ஆடல் வல்லானின் அற்புதங்களை நெஞ்சில் நிறுத்தி, ‘‘திருவந்தாதி’ என்னும் அரிய நூலை அருளினார். 101 பாடல்கள் கொண்ட இந்த நூலில், பத்து பாடல்களுக்கு ஒருமுறை தாம் பெற்ற இறையனுபவத்தைக் கூறியுள்ளார்.

அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடியருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். திருவாலங்காட்டில் நடராஜர் சந்நதியின் பின் பிறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது மாசி மாதத்தில்தான்.

12. குபேரன் பேறு பெற்ற மாசிமகம்!

திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வர் அருள்புரிகிறார். ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்த ரிஷிகளின் ஆலோசனைப்படி திருத்தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.

13. வங்கக் கடலும் மாசி மகமும்

மாசிமகத்தன்று காந்தசக்தி மிகுந்த புதிய நீரூற்றுகள் தோன்றி கடலில் கலக்கும். எனவே, அன்றைய தினம் கடலில் நீராடும்போது, அந்த காந்தசக்தி உடலில் கலந்து உடலையும் மனதையும் புத்துயிர்ப்பு கொள்ளச் செய்யும். இதை மனதில் கொண்டே நம் முன்னோர் மாசிமகத்தன்று கடல் நீராடுவதை ஆன்மிகச் சடங்காக வைத்திருக்கின்றனர்.

14. திருவேட்டக்குடியில் மாசி மகம்

ஒருசமயம் உமையவள் மீனவப் பெண்ணாக அவதரித்தாள். அவளை மணம்செய்ய விரும்பிய ஈசன் ராட்சத மீனொன்றை சிருஷ்டித்து மீனவர்களை அச்சுறுத்தினார். பின்பு தானே மீனவனாக வந்து அந்த மீனை வென்றடக்கி, வெற்றிப் பரிசாக மீனவத் தலைவனின் மகளான உமையை மணந்து கொண்டார். இருவரும் மீனவர்களுக்கு சிவசக்தியாக காட்சி தந்த ருளினர். மீனவர் தலைவன் பேணி வளர்த்த தன் பெண்ணைப் பிரிவதையெண்ணி துயரம் கொண்டார்.

அவரது துயராற்றும் முகமாக ஈசன், “யாம் ஆண்டுக்கொருமுறை மாசிமகத்தன்று கடலாட வருவோம்; கண்டு மகிழலாம்” என கூறினார்.இந்நிகழ்வு திருவேட்டக்குடியில் நிகழ்ந்தது. மாசி மகத்தன்று ஈசனும் உமையும் மீனவப் பெண்ணாகவும் மீனவனாகவும் திருவேட்டக்குடி கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அச்சமயம் கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அகரம்பேட்டை மீனவர்கள் ஒன்றுகூடி, தங்கள்குலப் பெண்ணை மணந்த ஈசனை “மாப்ளே, மாப்ளே’ என கூவியழைத்து சொந்தம் கொண்டாடி, தீர்த்தவாரி மேற்கொள்வர்.

15. மெரினா மாசி மகம்

சென்னையில் மெரினா கடற்கரையில் கபாலி உட்பட்ட 7 சிவாலயங்கள், பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் எழும்பூர் சீனிவாசப்பெருமாள், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களின் சுவாமிகள் கடல் நீராட்டலும் தீர்த்தவாரியும் நடைபெறும் . இதேபோல் எலியட்ஸ் கடற் கரையிலும் நடைபெறும். பூந்தமல்லி, பட்டாபிராம், பெருமாள்கள், திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், மயிலாப்பூர் வெல்லீ, ஸ்வரர் கோயில், கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன், பெரம்பூர் அகரம் முருகன் கோயில், சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் வராகி கோயில் என பல ஆலயங்களின் உற்சவமூர்த்திகளை தரிசிக்கலாம். காலை நேரத்தில் கடற்கரை சர்வீஸ் சாலையில் வரிசையாக நிற்கும் உற்சவ மூர்த்திகளைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

16. மாமல்லபுரத்தில் மாசி மகம்

கருட வாகனத்தில் தலசயனப் பெருமாள் ஆதிவராகர் ஆகியோர் எழுந்தருள்வர். சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு யோகராமர் மற்றும் அருகில் உள்ள திருக்கோவில்களின் உற்சவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். மாமல்லபுரம் கடற்கரையில் பழங்குடிகளான இருளர்கள் தங்களின் குலதெய்வமான கன்னியம்மனை மாசிமகத்தில் வழிபடுவர். அதற்காகவே பல்வேறு ஊர்களிலிருந்து இருளர்கள் மாமல்லபுரம் வந்து சேர்வார்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும். பிறகு அவர்கள் பாரம்பரிய முறைப்படி கன்னியம்மனை வழிபடுவர். அதனை ஒட்டி அவர்களுடைய சடங்குகள் திருமணம் நிச்சயம் காது குத்துதல் மொட்டை அடித்தல் முதலியவற்றை நிறைவேற்றிக் கொள்வார்கள்

17. புதுச்சேரி கடற்கரையில் மாசிமகம்

புதுவை வைத்திக்குப்பத்தில் மாசி மக தீர்த்தவாரியில் 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் கலந்து கொள்ளும் காட்சி அபாரமாக இருக்கும். மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி, திண்டிவனம் நல்லியகோடான் நகர் அலர்மேல் மங்கா சமேதா சீனிவாச பெருமாள் புதுவை மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்கிரீவர், எனப் பல மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.தீர்த்தவாரியை முன்னிட்டு புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி சாமி தரிசனம் செய்து கடலில் புனித நீராடுவர்.

18. நெல்லையில் மாசிமகம்

மாசி மகத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் உள்ள பொற்றாமரைக் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர். இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ தேர்த் திருவிழா பிரபலமானதாகும். விழாவுக்கு முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில், இவ்விழாவை தொடங்கி வைத்த பராக்கிரம பாண்டியனின் உருவச் சிலையை நான்கு வீதிகளிலும் உலாவரச் செய்து, வீதிகள் சரியாக உள்ளனவா என உறுதி செய்தபின் மறுநாள் தேரோட்டம் நடைபெறும்.

19. சப்தசாகர தீர்த்தம்

நல்லூர் கல்யாணசுந்தரர் ஆலயத்தின் பின்புறமுள்ள குளத்திற்கு சப்தசாகர தீர்த்தம் எனப் பெயர். கர்ணனின் தாயான குந்தி, தன் மகனை பெட்டியில் வைத்து ஆற்றில்விட்ட பாவம் தொலைப்பதற்காக, ஏழு கடல்களின் நீர் இக்குளத்தில் பொங்கிவரவேண்டுமென ஈசனிடம் வேண்டினாள். அதனை யேற்று ஈசனும் அவ்வாறே அருள குந்தி இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி புண்ணியம் பெற்றாள். இந்த தெப்பக்குளம் ஈசன் அருளால் சப்தசாகர தீர்த்தமானது ஒரு மாசிமக நன்னாளில்தான். குந்தி மட்டுமல்ல; நாமும் அதில் நீராடிப் பலன் பெறலாம்.,

20. கடலூர் கடற்கரையில் மாசிமகம்

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருவஹீந்தபுரம், கடலூர் பாடலீசுவரர் முதல் சுமார் 24 திருக்கோவில்கள் உற்சவர்கள் கடற்கரை சென்று தீர்த்தவாரி கண்டு பக்தர்களுக்கு அருளும் காட்சி அற்புதக் காட்சியாகும். பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் தீர்த்தவாரிக்கு கடலூர் தேவனாம்பட்டினம் வருவார். வழியெல்லாம் மண்டகப் பணிகள் நடக்கும்.

என்ன இருந்தாலும் பெருமாளுக்குப் பெண் கொடுத்த மாமனாரின் (சமுத்திரராஜன்) வீடல்லவா. எனவே, கடல் தீர்த்தவாரி என்றால் பெருமாளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். மாமனாரின் வரவேற்பை மகிழ்ந்து ஏற்கும் அடியவர்க்கு மெய்யன். ஒய்யாரமான பல்லக்குடன் அசைந்து, அசைந்து ஆடி ஆனந்தமடைகிறான். இந்த உத்ஸவத்தை சேவித்த வேதாந்த தேசிகர் ‘‘மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவான்” என்று மங்களாசாஸனம் செய்கிறார் (துதிக் கிறார்) எழுநூறு வருடங்களுக்கு முன்பு அந்த மகான் பாடியபடியே இன்றும் இது நடைபெறுகிறது.

21. பரங்கிப்பேட்டை கடற்கரையில் மாசிமகம்

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் பகுதி உற்சவ மூர்த்திகளுக்கு கடல் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். அதோடு காளியம்மன், மாரியம்மன், பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கிள்ளை முழுக்குத் துறையில் தீர்த்தவாரி கோலாகலமாக நடக்கும். ஆண்டுதோறும் நடக்கும் தீர்த்தவாரியில் சிதம்பரம் நடராஜர், ஸ்ரீமு‌‌ஷ்ணம் பூவராகசாமி சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி நடப்பது வழக்கம். கடற்கரை முழுவதும் வரிசையாக சுவாமிகள் உற்சவ மூர்த்திகளைக் காண்பது கண்கள் பெற்ற பாக்கியமாக இருக்கும். காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆலயங்களின் உற்சவ மூர்த்திகளுக்கு எய்யலூர் கொள்ளிடக் கரையில் தீர்த்தவாரி நடைபெறும்.

22. பூம்புகார் மாசி மகம்

மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு மாசி மக வழிபாடு செய்வர். மாசி மகம் போன்ற நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு படை எடுப்பார்கள். மேலும் இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தக் கிணறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் மாசி மகம் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும்.

23. திருமலைராயன் பட்டினத்தில் மாசிமகம்

அமுதம் வேண்டி திருபாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டதனால் விஷ்ணு சமுத்திரராஜனின் மருமகன் ஆனார். மகாவிஷ்ணு தன் மகளை மணந்து கொண்டு வைகுந்தம் சென்றுவிட்டால் இனி நாம் எப்படி அவர்களை தரிசிப்பது என சமுத்திரராஜன் வருந்தினார். தந்தையின் மனக்குறையை லட்சுமி விஷ்ணுவிடம் கூறினாள்.

திருமால் ஆண்டிற்கு ஒரு முறை மாசிமகம் தினம் தாம் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருவதாக வரம் அருளினார். அதற்காகவே ஆண்டு தோறும் மாசிமகம் தினமன்று திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைராஜபட்டினம் கடற்கரை சென்று தீர்த்தவாரி செய்து திரும்புவார். அங்கு இருக்கும் மீனவ மக்கள் இவரை ‘‘மாப்பிள்ளைசாமி” என அழைத்து வணங்கி மரியாதை செய்து மகிழ்வர். நாகப்பட்டினத்தில்: சவுந்திர ராஜர், நீலாக்கோவில் ஆவராணி அனந்த நாராயணர், சட்டையப்பர், நாகூர் நாக நாதர் ஆகியோர் கடற்கரைக்கு எழுந்தருள கடலாடலும் தீர்த்தவாரியும் நடைபெறும்.

24. ஜோசியர் தெப்ப விழா

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர். மாசி மகத்தையொட்டி திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோவிலில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். இவ்விழாவை ஜோசியர் தெப்ப விழா என்பர். கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குளத்தில் முதல்நாள் முட்டுத்தள்ளுதல் விழா நடைபெறும். அன்று அதிகாலை யிலேயே சந்தான கோபாலகிருஷ்ணன் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் எழுந்தருளி, முட்டுத்தள்ளு வெள்ளோட்டம் கண்டு மாலைவரை குளக்கரை மண்டபத்தில் காட்சி தருவார். இரண்டாம் நாள் ஊரக மெல்லணையான் குளக்கரை எழுந்தருளி, காலை ஒருமுறையும் இரவு இரண்டு முறையும் தெப்பத்தில் உலா வருவார். மூன்றாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இவ்விழா நாட்களில் பக்தர்கள் குளக்கரையில் ஆயிரக்கணக்கில் விளக்குகளை ஏற்றிவைத்து பிரார்த்தனை செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

25. கும்பகோணத்தில் மாசிமகம்

மாசி மகத்தையொட்டி திருவையாறு காவிரி கரையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர்.ஆண்டு தோறும் மாசி மகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும். சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள் (மாசி மகம்), தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

26. காவிரி கரையில் மாசிமகம்

கும்பகோணத்தில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவில்களில் 10 நாள் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி, மகாமக குளத்தில் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள்.

பன்னிரண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். அமிர்தம் சிந்திய மகாமக குளத்தின் நடுவே 20 தீர்த்தங்கள் உள்ளன. அவை வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், யமுனை, குபேர தீர்த்தம், கோதாவரி, ஈசானிய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர, சரஸ்வதி, அக்னி, காவேரி, யம, குமரி, நிருதி, பயோடினி, தேவ, வருண, சரயு தீர்த்தங்கள் மற்றும் கன்னிகா தீர்த்தம் உள்ளிட்ட 20 தீர்த்தங்கள் உள்ளன. இதில் கன்னிகா தீர்த்தத்தில் மட்டும் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. 12 சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு மகாமக குளத்தைச் சுற்றி வலம் வந்து கரையில் நிறுத்தப்படுவர். தொடர்ந்து குளத்தில் அஸ்திர தேவருக்கு அபிஷே
கமும் தீர்த்தவாரியும் நடைபெறும். இதனையடுத்து பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

27. மாசிமகமும் தெப்ப உற்சவமும்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைறும். ராமர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக மாடவீதியில் உலா வருவர். ஐந்து முறை தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அப்போது சுவாமிக்கு கற்பூர ஆராதனை காண்பித்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்வர். மாசி மாத தெப்ப உற்சவம் திருமலை ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். (இந்த ஆண்டு மார்ச் 9ம் தேதிமுதல் 13ம் தேதிவரை 5 நாள்கள்) முதல் நாள் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ,இரண்டாம் நாள் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணசாமி, கடைசி மூன்று நாட்கள் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் பவனிவருவர்.

28. திருச்செந்தூரில் மாசி மகம்

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்: மாசி திருவிழா மார்ச் 3 முதல் மார்ச் 14, 2025 வரை 12 நாட்கள் கொண்டாடப்படும்.

3 மார்ச் 2025 – காலை: 5 முதல் 5.30 வரை – கும்ப லக்னம் – கொடியேற்றம்.
மாலை: 4.30 மணி – ஸ்ரீ அப்பர் சுவாமிகள் தங்க சப்பரம் – திருவீதி உழவர பணி
இரவு: 7 மணி – ஸ்ரீ விநாயகர் தந்த பல்லக்கில் அஸ்திர தேவருடன் உலா.
4 மார்ச் , 2025 காலை: 10.30 மணி – சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் சிறிய பல்லக்கு
இரவு: 7 மணி – சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் பெரிய கேடய சப்பரம்
5 மார்ச் , 2025 காலை: 7 மணி – பூங்கேடய சப்பரம் – கேடயம் சப்பரத்தில் அம்பாள் ;
இரவு: 6.30 மணி – தங்க முத்து கிடா வாகனம் – அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்.
6 மார்ச், 2025 காலை: 7 மணி – தங்க முத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்.
இரவு: 6.30 மணி – வெள்ளி யானை, அம்பாள் வெள்ளி சரப வாகனம்.
7 மார்ச், 2025 காலை: 7 மணி – வெள்ளி யானை, அம்பாள் வெள்ளி சரப வாகனம்.
இரவு: 7.30 மணி – மேலக்கோவில் குடவருவாயில் தீபாராதனை – தங்க மயில் வாகனம்.
8 மார்ச், 2025 காலை: 7 மணி – கோ ரதம்;
இரவு: 8 மணி – வெள்ளி தேர், அம்பாள் இந்திர விமானம்.
9 மார்ச், 2025 – நாள் 7
அதிகாலை: ஸ்ரீ சண்முகர் உருகு சத்த சேவை.
காலை: 5.30 மணிக்கு பிறகு – ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான் பல்லக்கு.
காலை: 8.30 மணி – வெட்டி வேர் சப்பரத்தில் ஆறுமுக நயினார்.
மாலை: 4.30 மணிக்கு பிறகு – தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி சப்பரம்.
10 மார்ச், 2025 காலை: 5 மணி – பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சதி;
முன்பகல்: காலை 10.30 மணிக்குப் பிறகு – பச்சை சாத்தி சப்பரம்.
ஸ்ரீ குமர விடங்க பெருமான், ஸ்ரீ அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனம்.
11 மார்ச், 2025 காலை: 7 மணி – பல்லக்கு
இரவு: 8 மணி – தங்க கைலாய பர்வதம், வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள்
12 மார்ச், 2025 – காலை: திருத் தேர் வடம் பிடித்தல்
இரவு: 7.30 மணி – பெரிய திருப்பல்லக்கு
இரவு: த்வஜாஆவரோஹணம் (கொடியிறக்கம்) – தீர்த்தவாரி
13 மார்ச், 2025 – இரவு: 7 மணி – புஷ்ப சப்பரம் – தெப்பக்குளம் மண்டகபாடி சேர்தல்.
இரவு: 10.30 மணிக்கு பிறகு – அபிஷேகம், அலங்காரம் – தெப்ப உற்சவம்.
(11 சுற்று வருதல் அதாவது தெப்பத்தில் 11 சுற்று) – மேலக்கோவில் சேர்தல்.
14 மார்ச், 2025 – மாலை: 4.30 மணி – மஞ்சள் நீராடல்.
இரவு: 9 மணி – மலர் கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் –

29. மாசி மக நோன்பு

ஆண் குழந்தை வேண்டுபவர்கள் மாசி மக நோன்பு இருந்து முருகப் பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை. மாசி மகம் நாளில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசி மகம் நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

சமுத்திரத்தில் தீர்த்தமாடும்போது சொல்ல வேண்டிய
ஸ்லோகம்:
தரங்காத் ந: ஸமுத்தர்தும் தரங்கமுக நந்திநீ
அந்தரங்க: பவாத் தேவ: தரங்கம் அபிகச்சதி
(ஸம்ஸாரம் எனும் பெரும் அலைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றவே, அலையரசன் மகளான மகாலட்சுமியின் நாயகனான தேவநாதன், அலைகளில்
இறங்குகிறான்)

30. தாலிக் கயிறு மாற்றுதல்

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியா கவே அவர்கள் வாழ்வார்கள். இதற்கு மாசி சரடு பாசி படரும் என்ற பழமொழியும் உண்டு. இதற்கு விளக்கம் மாசி வெள்ளிக்கிழமையில் கட்டப்படும் மஞ்சள் சரடு பாசி படரும் வரை நிலைத்திருக்கும்.

அதாவது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பதே இந்த பழமொழியின் பொருள். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை ‘‘பிதுர் மகா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம்.அன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சந்நதிகளில் நடக்கும், பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும். சதுரகி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை க்ஷேத்திரங்களில் கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் 7 ஜென்ம பாவம் தீரும். மாசி மக நாளில் புனித நீராட முடியாதவர்கள் மாசி மக புராணம் படிக்கலாம்.

எஸ். கோகுலாச்சாரி

The post பாவங்களை போக்கும் மாசி மகம் appeared first on Dinakaran.

Related Stories: