சித்திரை நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் கன்னி, ஆடை, ஆம்பரம், பயறு,நெய்,மீன்ஆகியவை ஆகும்.
சித்திரை – விருட்சம் : வில்வம்
சித்திரை – யோனி : ஆண் புலி
சித்திரை – பட்சி : காகம்
சித்திரை – மலர் : மந்தாரை
சித்திரை – சின்னம் : ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்
சித்திரை – அதிபதி : செவ்வாய்
சித்திரை – அதி தேவதை : விஸ்வகர்மா
சித்திரை – கணம் : ராட்சஷ கணம்
சித்திரை நட்சத்திரம் உடைபட்டு 1ம் பாதம், 2ம் பாதம் புதன் ஆட்சி வீடாக கொண்ட கன்னியிலும்; 3ம் பாதம், 4ம் பாதம் சுக்கிரன் ஆட்சி வீடாக கொண்ட துலாம் ராசியிலும் உள்ளது. இதனால் வாழ்வின் முந்தைய காலகட்டங்களும் வாழ்வின் பிந்தைய காலகட்டங்களும் மாறுபட்டு இருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள் சக்கரத்தாழ்வார், சித்திர குப்தன் ஆகியோர்.
சித்திரையில் பிறப்பெடுத்த சித்ரகுப்தன்
சித்திரம் என்றால் தேகம் என்றும் ஓவியம் என்றும் அர்த்தம். அதாவது ஓவியமாக வரைந்து காட்டப்பட்டு பின்பு பார்வதி அம்மைக்கு மகனாக பிறப்பெடுத்தார். அவர் சித்திரம் போல குள்ள வடிவில் காணப்பட்டார். குப்தன் என்றால் குள்ளன் என்ற ெபாருளும் உண்டு.
பின்பு, தேவலோக பசுவான காமதேனுவின் வயிற்றில் நுழைந்து சித்ரா பௌர்ணமி நாளில் அவதரித்தார் என புராணங்கள் சொல்கின்றன. அவர் பிறந்த அந்நாளில்தான் அவருக்கு திருமணம் நடந்ததாகவும் உள்ளது. அந்நாளில், சித்தர குப்தன் உலகத்தில் உள்ள மனிதர்களின் பாவ – புண்ணியக் கணக்குகளை வைத்திருப்பதாக ஐதீகம். ஆதலால், அப்பெருமானை வணங்கினால் இனிவரும் காலங்களில் புண்ணியங்களை சேர்ப்பதற்கான ஆசிகளை வழங்குவார் என்பது காலம் காலமாக நமது மக்களின் நம்பிக்கை.
இதுபோலவே, இந்திரனின் குரு தேவ குருவான பிரகஸ்பதி ஆவார். இந்திரன் குருவை மதிக்கத் தவறியதால், பிரகஸ்பதி இந்திர சபையிலிருந்தும் இந்திரனை காண்பதையும் தவிர்த்து விலகியிருந்தார். இக்காலக் கட்டத்தில் இந்திரன் பல தவறான செயல்களை செய்தது மட்டுமில்லாமல், பலரின் சாபங்களை பெற்றான். இதனால் மனக்கலக்கத்தில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உருவம் உருகுலைந்து பெரும் துயரங்களை சந்தித்தான். தனது குருவை மனதில் நினைத்து வருந்தினான்.
இந்த விஷயங்களை அறிந்த பிரகஸ்பதி இந்திரனான தனது சீடன் மீது அன்பு கொண்டு மீண்டும் இந்திரனை சந்திக்க வந்தார். இந்திரன் தன்னை மன்னிக்க வேண்டி சாபங்களும் பாவங்களும் தீர அறிவுரை வேண்டினார். பிரகஸ்பதியும் சில யாத்திரைகள் செல்ல இந்திரனுக்கு அறிவுறுத்தினார்.
பிரகஸ்பதியின் அறிவுறுத்தலின்படி, பூலோகத்தில் கடம்ப வனம் (மதுரை) என சொல்லக்கூடிய இடத்தில் ஒரு கடம்ப மரத்தின் கீழ் உள்ள சிவலிங்கத்தை கண்டு அதன் அருகில் சென்றான் இந்திரன். அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்றதும், தனது மனமும் உடலிலும் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். அக்கடம்ப வனத்தில் பூத்திருந்த தாமரைகளைக் கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டு நிஷ்டையில் அமர்ந்தான். பின்புதான் தான் இழந்த உடல் அழகையும் பெற்று, பாவ விமோச்சனமும் பெற்றான்.
இன்றும், சித்ரா பௌர்ணமி நாளில் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நதியில் தேவந்திர பூஜை நடக்கிறது. அதன்படி நம் தவறுகளை நாம் உணர்ந்து சிவபெருமானையும் சித்ர குப்தனையும் வழிபட நம் பாவங்கள் கரைந்து போகும் என்பது சித்ரா பௌர்ணமி வழிபாட்டின் தாத்பரியமாகும்.
பொதுப்பலன்கள்
இது உடைபட்ட நட்சத்திரமாக இருப்பதால் இரண்டு விதமான வாழ்வில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். வாழ்வில் பல ரணங்களை சந்தித்துக் கொண்டே இருப்பர். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சகோதர, சகோதரிகளுக்கு உதவியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களை வைத்து காரியம் சாதித்துவிட்டு அமைதியாக இருந்து விடுவார்கள். உடலில் ஏதேனும் ரணங்கள் வந்து போகும் வாய்ப்புகள் உண்டு. ரத்தத்தில் சில குறைபாடுகள் இருக்கும்.
தொழில்
இவர்களின் வேகம் தொழிலிலும் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல ஏராளமான வேலையை முடிப்பார்கள். அதற்கான வருமானம் ஈட்ட முடியாமல் சிரமத்தில் இருப்பர் என்பதே நிதர்சனம். அடிக்கடி முருகர் / ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது தொழிலில் இருக்கும் சிக்கல்களை சரி செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.
ஆரோக்கியம்
உடற்பயிற்சி செய்வது நன்மை தரும். குறிப்பாக ஹதயோகம் செய்வது மிகவும் நன்மை தரும். சரியான குருமார்கள் மூலம் பயிற்சி எடுப்பது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உணவுகளி்ல் காரமான உணவுகளை மட்டும் எடுக்காமல் அனைத்து சுவைகளையும் எடுத்துக் கொள்வது நன்மை தரும்.
சித்திரைக்குரிய வேதை நட்சத்திரம்
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். மிருகசீரிஷம், அவிட்டம் வேதை நட்சத்திரமாக உள்ளது. எனவே,இந்த நட்சத்திர நாட்களில்புதுகாரியங்கள் தொடங்கு வதை தவிர்க்கவும். கொடுத்த பணத்தை திரும்ப கேட்க முயற்சிப்பதையும் தவிர்க்கவும் .
பரிகாரங்கள்
சித்திரை நட்சத்திர நாளில் நீங்கள் மதுரை அருகில் இருக்கக்கூடிய சோழவந்தான் சென்று அங்குள்ள குருவித்துறையில் சித்திரை ரத வல்லப் பெருமானை தரிசனம் செய்வது சிறப்பாகும். மேலும், சித்ரா பெளர்ணமி அன்று விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
The post சித்திரை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.