சாத்திரத்தை குழப்பமின்றி கற்க வேண்டும்
“இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்” என்பதனால் உபாசகனானவன் தான் செய்த உபாசனையின் பலன் நெடுநாள் கிடைக்கவில்லை என்றால் மனம் நொந்து பலன் கிடைத்ததாக கூறுபவர்கள் அறிவுரையைக் கேட்டு வேறு சமயத்தை, அது சொல்லும் வழியை அறிந்து கொள்ள முன்வந்து, அது சார்ந்து முயற்சி செய்து அடைய முயல்வது. தன் முயற்சிக்கு பலன் கிடைக்காத போது பிறருக்கு அது கிடைக்கும் போது தன் நெறியின் மீது நம்பிக்கை அற்று வெறுப்பும், சலிப்பும் தோன்றுகிறது. மனம் நொந்து புலம்புவது இதை அபிராமிபட்டர் ‘நன்றே உனக்கு’ (30) ‘இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே’ (93) என்பதனால் உபாசனை தேவதை மீது கோபம் ஏற்படும்.
இது உபாசனைக்கு மிகவும் எதிர்நிலைப் பண்பாகும். இதை ‘இதுவோ உன் தன் மெய்யருளே’ (57) என்பதனால் அறியலாம். ‘‘இனி யான்” என்பது தீக்ஷை எடுத்துக் கொள்ளும் வரையில் தனக்குரிய தேவதையை தேடி வெவ்வேறு முயற்சிகளைச் செய்யலாம். வெவ்வேறு சாத்திரங்களை அப்யாசிக்கலாம் அதன் வழி முயற்சி செய்தும் பார்க்கலாம். ஆனால் தீக்ஷசை செய்து கொண்டபின், உபாசனை எடுத்துக்கொண்ட தெய்வத்தைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் மனதால் கூட நினைக்கக்கூடாது. உபாசனை தெய்வத்தை மட்டுமே வணங்க வேண்டும். மேலும் உபாசனைக்கு முன் தான் சென்ற பல வழிகளைப் பற்றி குழம்பிக் கொள்ள கூடாது.
இதையே பட்டர் ‘வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே’ (63) என்பதனால் அறியலாம்.ஒரு சாத்திரத்தை மற்றச் சாத்திரத்தோடு ஒப்பிடக்கூடாது. அது மிகுந்த குழப்பத்தை தோற்றுவிக்கும். தன்னுடைய சாத்திரத்தை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும் ஒரு சாத்திரமானது ஏழு படிநிலைகளில் உணர வேண்டும். அதை அறிந்தால் “மதிமயங்கேன்” என்ற சொல்லின் விளக்கத்தை தெளிவுற அறியலாம்.
சாத்திரத்தின் கருத்தாக்கக் கொள்கையை குழப்பமின்றி கற்க வேண்டும். சாத்திரம் சொல்லுகிற நோக்கிலே அறிய வேண்டும். செயலாக்க கொள்கையை முறையாக அறிந்து செயல்படுத்த வேண்டும். செயல்பாட்டல் தவறு இருக்கக்கூடாது. காலம், உபாசகனின் மனம் உபாசகனின் கர்மபலம், முயற்சியின் வேகம் இது சார்ந்து பலன் வேறுபடும். தேவதை தன் நோக்கில் அருளக் கூடியது அது சார்ந்தும் பலன் வேறுபடும்.
சாத்திரம் என்பது தேவதையினால் சொல்லப்பட்ட வேதம், ஆகமம் போன்றவற்றையே குறிக்கும். வேத ஆகம கொள்கைக்கு முரண் இல்லாத வகையில் எழுதப்பட்ட அருள் பெற்றவர்கள் என ஊர் அறிய ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அவர்கள் சொன்னது தன் குரு சொன்னது முதலியவற்றை முதன்மையாக கொள்ள வேண்டும். சில அனுபவம் உபாசகனுக்கு ஏற்பட்டாலும் அதற்கான சான்று சாத்திரத்தில் இருக்க வேண்டும் சாத்திரம் பொய் சொல்லாது. சாத்திரத்தை நிர்விசாரமாய் [ஆய்வு செய்யாமல்] ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பண்புகள் அனைத்தும் உபாசகனிடம் இல்லை என்றால் மட்டும் பிற சமயத்தை நாடி மதி மயங்குகிற நிலை ஏற்படும். மேலும் ஆன்மிகத்திற்கு அனுபவமே முதல் சாட்சி. அறிவு இரண்டாவது சாட்சி, தேவதை மூன்றாவது சாட்சி, குரு நான்காவது சாட்சி. இந்த சாட்சிகளை எல்லாம் முறையாக அறிய வேண்டும். அதன் பிறகே குறை கூற வேண்டும். சாத்திரத்தை முறையாக அறிந்தால் குறை கூற முடியாது இக்கருத்துக்களை எல்லாம் தெளிவுற மனத்தில் கொண்டோர் மதி மயங்க மாட்டார்.
அல்லாதோர் மதி மயங்குவார். அபிராமி பட்டர் இறைவியின் அருளை பெற்ற பின்பு பாடும் பாடல் இது. அதனால் இறைவியின் அருள் வழியாய் தான் அடைந்த பேற்றை “இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்” என்கிறார்.“அவர்போன வழியும் செல்லேன்” மனிதனின் மனமானது அவன் சூழலை சார்ந்தே பெரும்பாலும் அமைகிறது. சூழல் மாறும் போது மனமும் மாறி விடுகிறது. அவ்வாறு மாறாமல் உறுதியோடு இருக்கவே இவ்வாறு குறிப்பிடுகிறது.
மனம் மயங்குவதற்கு காரணம் சொல்கிறார். மிகை, வெம்பிணி, வறுமை, வயது, மூப்பு, பகை, பாவம், செய்து முடிக்க வேண்டிய பல காரியம் இவைகள் தாம் பிறர் போன வழியில் நம்மைச் செலுத்தும் என்பதையே “அவர்போன வழியும் செல்லேன்” என்ற காரணங்களையே இங்கே வரிசைப் படுத்துகிறார். ‘மிகையுந் துரத்த வெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த மிடியுந் துரத்த நரை திரையும் துரத்தமிகு வேதனை களுந் துரத்தப் பகையுந் துரத்த பதிமோகந் துரத்த பல காரியமுந் துரத்த நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த நாளுந் துரத்த வெகுவாய்’ (பதிகம்-21) இந்த காரணங்களே மனிதனை அடிமை கொள்கிறது, இறைவன் மனிதனை அடிமை கொள்ளவில்லை.
மேலும் எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட் டொறுக்க அந்தோ எவ்விதம் உளஞ் சகித் துய்குவேன், இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில் நண்ணியென் ளளவு சுகமானதொரு நாளினும் நான் அனுபவித்த தில்லை (பதிகம்-11) என்பதனால் பர சமயத்திற்கு சொல்வதற்குரிய காரணங்களை குறிப்பிடுகிறார் உமையம்மையின் அருள் மட்டுமே இத்தகைய துன்பங்களை கடந்து செல்ல உதவும்.
அதையே ‘வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்தோங்கிவர அருள் மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்ன தன்பெனுஞ் சிறகால் வருந்தாமலே யணைத்துக கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசில்பினைக் குறையாமலே கொடுத்தும் நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும் நின்மலி அகிலங்களுக்கு அன்னை என்றோதும்’ (பதிகம்-10)கேட்கின்ற வரங்களை குறையாமலே கொடுத்து நான் செய்கின்ற தவறை போக்கி அன்னையாய் அபிராமி பட்டருக்கு அருள் செய்ததால் அன்னை வழியன்றி “இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்” என்கிறார்.
“முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே” “முதல்தேவர்” என்பவர் உமையம்மையால் உலக உயிர்கள் துன்புறாத வண்ணம் உடலை படைத்து, அது உயிரை விட்டு விலகாமல் காத்தும், அறியாமையை அழித்தும் அருள்செய்ய உருவாக்கப்பட்ட உமையம்மையின் அருட்சத்தியை நாவில் கொண்ட பிரம்மனும், மார்பில் கொண்ட விஷ்ணுவும், உமையின் உடலில் பாதியைப் பெற்ற ருத்ரனுமே “முதல்தேவர்” ஆவர்.
இவர்கள் உமையம்மையை தங்கள் உறுப்பாகவே பெற்று உயர்ந்ததால் உமையம்மையை துதிக்கிறார்கள். இதையே “முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே” என்கிறார்கள். இதையே பட்டர் ‘வந்திப்பவர் உன்னை…நற்றிசைமுகர்’(14) என்பதனால் பிரம்மாவையும் ‘நாரணர்’(14) என்பதனால் விஷ்ணுவையும் ‘அழியாப் பரமானந்தர்’ (14) என்பதனால் ருத்ரனையும் இங்கே குறிப்பிடுகிறார். மேலும் ஸ்ரீவித்யா உபாசனையைப் பொறுத்தவரை சக்தி தத்துவமே உயர்ந்த நிலையில் உள்ளது. நாக்கு உலரும் போது ஒலியாக நிற்கிறது வேதம். மூச்சு அழியும் போது அருளாக நிற்கிறது வேதம். உடலின் பாதி பெற்றதனால் அழிவற்று நிற்கிறார் ருத்ரன். அதனாலேயே ‘அழியாப் பரமானந்தர்’ (14) என்கிறார் ருத்ரன் என்றும் அழிவதில்லை.
உமையம்மையின் இச்சா சக்தி விஷ்ணு, கிரியா சக்தி பிரம்மா, ஞான சக்தி ருத்ரன் இவர்கள் உமையம்மையை முழுமுதற் பொருளாகக் கொண்டு வணங்கினால், அந்த உபாசகருக்கு இவர்கள் மூவரும் தாமாக முன்வந்து அருள்வர். திருக்கடையூரில் தல புராணத்தை மறைமுகமாக பதிவு செய்கிறார். திருக்கடையூரில் இலக்குமியுடன் எழுந்தருளியுள்ள அமிர்தநாராயணப் பெருமாள் சரஸ்வதி உடனாய பிரம்மபுரீஸ்வரர் அல்லது வில்வ வனநாதர், பாலாம்பிகா உடனுரை கால சம்ஹார மூர்த்தியாகிற ருத்ரர் இவர்கள் மூவருமே இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
இதையே ‘மாயா முனிவரும்’ (4) என்பதனால் மிருத்யுஞ்ஜயரையும் ‘தேவரும்’(4) என்பதனால் அமிர்த நாராயணப் பெருமானையும் ‘வந்து சென்னி குனிதரும்’ (4) என்பதனால் சென்னியை இழந்ததனால் பணிந்து துதித்த பிரம்மாவையும் சேர்த்து “முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்” என்கிறார்.
‘‘முகிழ்நகையே’’ என்பதனால் உமையம்மையானவள் மிகவும் எளிமையாக புன்சிரிப்புடன் விரைவாக அனைத்து உலகங்களையும் இவர்கள் மூலம் படைத்து, பாதுகாத்து, ஞானத்தை தோற்றுவிக்கிறாள். இம்மூவரும் செயலாக செய்வதை உமையம்மை கடைக் கண்களாலும், தன் கால்களாலும் புன்சிரிப்பினாலும் செய்கிறாள் என்ற அவளின் முத்தேவரின் ஒருங்கிணைந்த பேர் ஆற்றலையே “முகிழ்நகையே” என்கிறார். இதையே பட்டர் “முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே” என்கிறார்.
‘‘அந்தமாக’’“பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி” என்பதனால் உமையம்மையின் திருவடியை நாடி அதற்கு அன்புள்ளம் உருகி என்பதையும் “உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்” என்பதனால் உமையம்மை விரும்பும் படியாக அவளுக்கு தொண்டு செய்ய அபிராமிபட்டராகிய தன்னை உமையம்மை அடிமையாக்கிக் கொண்டாள். [கொண்டதனால்] “இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங்கேன்” என்பதனால் உமையம்மை தன்னை ஆட்கொண்டதனால் பிற சமயங்களை பின்பற்றி அதன் வழியே நன்மைகளைப் பெற மதிமயங்கி “அவர்போன வழியும் செல்லேன்” என்பதனால் பிற சமயத்தை அடியொற்றி அவர் செல்கின்ற வழியில் செல்லமாட்டேன்.
“முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே” என்பதனால் திருக்கடையூரிலே எழுந்தருளி இருக்கக்கூடிய வில்வ வனநாதர், அமிர்த நாராயணன், கால சம்ஹாரர் இவர்களால் வழிபடப்பட்ட அமிர்த கடேஸ்வரரின் மனைவியாகிய காத்யாயனியே என்று உமையம்மையை முன்னிலையில் அழைத்து பேசுகிறார். அவளை வணங்கி வளம் பெறுவோம்.
(தொடரும்)
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.