அற்புத வாழ்வு தரும் கோமதியம்மன்

சங்கரன்கோவில் தென்காசி மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் அடுத்த பெரிய நகரம். கோயில் நகரம். சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்துபோகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்திப் பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம், சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின.அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சந்நதி ஆகும்.

இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் பழமையானது.ஸ்ரீ கோமதிஅம்மன், சிவனை வேண்டி ஊசிமுனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடம் சென்று முறையிட்டனர்.சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழுவடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராக (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்றுமண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்றுமண்ணை நெற்றியில் திருநீறாக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரைமாதம் சித்திரை பிரமோற்சவம் விழாவும், ஆடிமாதம் ஆடித்தவசுத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

உமை ஒரு பாகனாய் காட்சிதரும் சிவ பெருமான் சங்கரன் கோவிலில் புன்னைவனத்தில் பசுக்கூட்டங்களின் நடுவே அன்னை கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்ததை மெச்சி, நாராயணரை தனது இடது பாகத்தில் ஏற்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர்.இந்த நிகழ்வு ஒரு ஆடிமாதத்தில் நிகழ்ந்தது.இன்றைக்கும் ஆடி மாதத்தில் சங்கரன்கோவிலில் தவசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்!ஆடிமாதத்தின் பெளர்ணமி நன்னாளில், உத்திராட நட்சத்திர நாளில்தான் சிவனாரும் பெருமாளும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தருளினர். அதனால்தான் ஒவ்வொரு ஆடிபெளர்ணமிக்கு முன்னதாக, ஆடித்தபசு விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசிநாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கர நாராயணர் இவளுக்கு காட்சி தருவார். சங்கரன்கோவில் வித்தியாசமான கோயில். சிவன், அம்பாள் சந்நதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நதி உள்ளது.

சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாகவடிவில் சங்கரன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்கக் குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமிமாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசிமாலைகளை அணிவிக்கிறார்கள்.பகல் 12 மணியளவில் கோமதியம்மன் தங்கச்சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வந்து, தெற்குரதவீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வாள்.மாலை 4.00 மணிக்கு கோயிலில் இருந்து ரிஷபவாகனத்தில் சிவன் சங்கர நாராயணராக அலங்கரிக்கப்பட்டு, காட்சி மண்டபம் வந்து சேர்வார். அங்கிருந்து காட்சிப்பந்தலுக்கு போவார். தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் புறப்பட்டு காட்சிப்பந்தல் வந்தவுடன் பட்டு, பரிவட்டம், மாலை மரியாதை நடைபெறும்.

அப்போது தன்வலது காலை உயர்த்தி, இடக்காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அருள்கிறாள். இந்தக் காட்சியைப் பல்லாயிரம் பக்தர்கள் கண்டு வணங்குகிறார்கள்.அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.அம்பாள் சுவாமியை மூன்றுமுறை வலம் வருவாள் சிவன் அம்பிகைக்கு 6.15 மணிக்கு சங்கர நாராயணராகக் காட்சி தருவார்.விழாவில் தினமும் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.விழாவின் 9ம் நாள் தேரோட்டம் நடைபெறும்.விழாவின் சிகரநிகழ்ச்சிதான் ஆடித்தபசு.சங்கரநாராயணராக அம்மைக்கும் மக்களுக்கும் காட்சி அளித்த ஈசன் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளியானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்குக் காட்சி அளிக்கும் 2 ஆம் தபசுக் காட்சி நடக்கும். இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

The post அற்புத வாழ்வு தரும் கோமதியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: