மேட்டுப்பாளையம், மார்ச் 11: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த திமுக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி தலைமையில் நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி முன்னிலையில் பேருந்து நிலையம் முன்பு திரண்ட திமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒன்றிய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும், கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த திமுக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, ஆர்பாட்டத்தின் இறுதியில் அதுவரை மறைத்து வைத்திருந்த ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை பேருந்து நிலையம் முன்பு தீயிட்டு கொளுத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து திமுகவினரை கலைந்து போக செய்தனர். இதனால், மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post திமுக எம்பிக்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.