கும்ப ராசி முதலாளி வேலை வாங்குவதில் திறமைசாலி

கும்ப ராசியில் பிறந்தவர்கள் நேர்மையும், தொழில் விஸ்வாசமும் உடையவர்கள். எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழிலில் 100% மனதைச் செலுத்தி அக்கறையோடு செய்வார்களே தவிர, ஏனோ தானோ என்று செய்வது கிடையாது. இவர்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளியாக அதிகாரியாக அல்லது மேலாளராக இருந்தாலும், பணியாட்களை விட எளிமையான உள்ளம் கொண்டவர்களாக தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு வேலையிலேயே கவனம்
செலுத்திக் கொண்டே இருப்பார்கள்.

கூடுதல் வேலை வாங்கும் சமர்த்தர்

கும்ப ராசி முதலாளி / அதிகாரி, சுதந்திர சிந்தனையோடும், திறந்த மனதோடும் தொழிலாளர்களை அணுகி அவர்களிடம் அளவாகப் பேசிக் கூடுதலாகவேலை வாங்கி விடுவார்கள். அவர்களுக்கான தேநீர் இடைவேளை உணவு இடைவேளை நேரங்களை இயன்றவரை குறைக்க திட்டமிடுவார்கள். விடுமுறை நாட்களில்கூட இரண்டு மணி நேரம், ஒரு மணி நேரம் வந்து இந்த வேலையை மட்டும் செய்துவிட்டு, போங்கள் என்று சொல்லி 5 மணி நேரம் வேலை வாங்கிவிடுவார்கள். வேலை நேரம் முடிந்ததும் ஓவர் டைம் பார்ப்பதற்கு நல்ல சம்பளம் தருவதாகச் சொல்லி ஓவர் டைம் வேலை வாங்குவார்கள்.

புதிய யோசனைகள்

கும்ப ராசி முதலாளிகள், அதிகாரிகள், தொழிலதிபர் போன்றோர் தினமும் இரவில் உறங்காமல் புதிது புதிதாக சிந்திப்பர். புதிய யோசனைகளைத் தங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் கலந்து ஆலோசிப்பார்கள். அவர்களின் கருத்துக்களையும் கேட்டு பின்பு தனது சிந்தனைக்கு முழு வடிவம் கொடுத்து நீண்ட காலத் திட்டங்களை உருவாக்குவர்.

பகுப்பாய்வும் பணி ஒப்படைப்பும்

கும்ப ராசி முதலாளி / தொழிலதிபர் அல்லது உயர் அதிகாரிகள், பகுப்பாய்வுத் திறன் உடையவராக இருப்பார். ஒரு வேலையை ஒரு பணியாளிடம் கொடுப்பதால் அந்த வேலை சிறப்பாக முடியுமா? எதிர்பார்க்கும் நேரத்திற்குள் முடித்து விடுவாரா? இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவனிடம் கொடுப்பார். பணியாளர் மேலாண்மையில் (Personnel Management) மிகவும் கெட்டிக்காரர். கும்ப ராசி முதலாளிக்கு வேலையின் தெளிவு சுளிவுகளும் தெரியும். அதே சமயம் வேலையாட்களின் ஏமாற்று வித்தைகளும் புரியும். இவரை யாரும் ஏமாற்ற இயலாது. ஏமாற்ற நினைத்தால் அவர் எவ்வாறு ஏமாற்றக் கருதுகின்றார், திட்டமிடுகின்றார் என்பதை அவரைக் காட்டலும் சிறப்பாக இவர் பணியாளுக்கு எடுத்துரைப்பார்.

அளவான உரையாடல்

கும்ப ராசி முதலாளியின் உரையாடல் பாணி சுவாரசியமானது. அவர் நேரடியாக பெயரைச் சொல்லி அழைத்து இன்ன வேலையை, இன்ன நேரத்துக்குள் முடித்துக் கொடுங்கள் என்று மட்டும் கூறுவார். அவர்கள் அந்த வேலையில் உள்ள சிரமங்களை எடுத்து கூறத் தயங்கினாலும் அல்லது எடுத்துரைத்தாலும் கும்ப ராசி முதலாளி அவர்களின் தயக்கத்தைப் போக்கி வேலையை விரைவாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்ற தொழில் உத்திகளையும் (டெக்னிக்ஸ்) சொல்லிக் கொடுப்பார்.

புதிய முதலாளிகள்

கும்ப ராசி முதலாளியின் நிறுவனத்தை விட்டு அவரது வேலையாட்கள் வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கினாலும்கூட `என் முதலாளி இந்த வேலையை இப்படிப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்’ என்று பலரிடமும் சொல்லி மகிழ்வார்கள். கும்ப ராசி முதலாளியை அவரிடம் தொழில் பழகியவர்கள் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். நன்றியோடு நினைவு
கூர்வார்கள்.

சீரான தொழில் பயணம்

கும்ப ராசி முதலாளியின் தொழில் பயணம் எப்போதும் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். கும்பராசி தொழிலதிபர் மற்றும் மேலதிகாரிகள் தன் நிறுவனத்தைக் குறித்த தெளிவான இலக்குகளை வரையறுத்து வைத்திருப்பார்கள். அதற்குரிய கால வரையறையையும் தெளிவாக நிர்ணயம் செய்து வைத்திருப்பார்கள். எனவே இவர்கள் பயணத்தில் ஏற்ற இறக்கம் வெற்றி தோல்வி லாபம் நட்டம் போன்றவை மாறிமாறி வராது. சீராக இருக்கும். வேலைத் திட்டத்தின் விளக்கம், அதன் கால நிர்ணயம், வேலையினால் கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து தெளிவான கருத்து இவரிடம் இருக்கும்.

இடர் மேலாண்மை

கும்ப ராசி மேல் அதிகாரி / தொழிலதிபர் ஒரு வேலையைச் செய்யும்போது ஏற்படும் இடர்ப்பாடுகள் எவை என்பதை முதலிலேயே அனுமானித்து பணியாட்களிடம் விளக்கிக் கூறுவார்கள். பின்பு இந்த வேலை செய்வதில் இன்ன பிரச்னை ஏற்பட்டது, இந்தத் தடங்கல் ஏற்பட்டது என்று அவர்கள் இவரிடம் வந்து முறையீடு செய்ய இயலாது. காரணம் எல்லாவற்றையும் இவர் முதலிலேயே விளக்கிச் சொல்லி இப்படித்தான் செய்ய வேண்டும் இப்படி செய்தால் உங்களுக்கு எளிமையாக முடியும் என்று சிறந்த வழிகாட்டியாக தொழில் உத்திகளை கற்றுக் கொடுக்கும் நல்ல வாத்தியாராக இருப்பார்கள்.

அதீத நம்பிக்கை

என்னால் மட்டுமே இது முடியும் என்று தங்கள் மீது அதீத நம்பிக்கை (over confidence) வைத்திருப்பதால் தாங்கள் இல்லாவிட்டால் வேலையாட்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள். ஏமாற்றி விடுவார்கள். கதை பேசிக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கண்காணிப்பில் மட்டுமே வேலை
களைச் சிறப்பாக முடிக்க முடியும் என்று நம்புவார்கள். இந்த எண்ணம் காரணமாக இவர்கள் எந்த நேரமும் வேலையாட்களைக் கண்காணித்துக் கொண்டே
இருப்பார்கள்.

எல்லாம் எழுத்து மயம்

ஒருவரிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருக்க கும்ப ராசி அதிகாரியால் இயலாது. அவர்களின் வேலைகளைப் பற்றிய ஆவணப் பதிவுகளை (records) எப்போதும் நிகழ்நிலைப்படுத்திக் கொண்டே (updating) இருப்பார்கள். ஆவணங்கள் முக்கியம் என்பதை இவர்களின் கருத்தாக இருக்கும். எந்த ஒரு பணியாளைப் பற்றிய விவரமும் அவரிடம் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கும். ஏதாவது ஒரு பிரச்னை வந்தால் பணியாளர் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து அவரது நிகழ்வுகளை (performance) எடுத்துரைத்துத் தினறடிப்பார்.

மற்ற பிரிவுகளில் தலையீடு

தன் பணியாள் தன்னை ஏமாற்றி விடக்கூடாது என்ற சந்தேகம் புத்தியால் கும்ப ராசி முதலாளிகளுக்கு பெரும்பாலும் நிம்மதி இருக்காது. உறக்கம் வராது. கும்ப ராசி மேலாளர் அல்லது தொழிலதிபர் அடிக்கடி தன் வழக்கறிஞர்களிடம் கணக்காளர் மற்றும் ஆடிட்டர்களிடம் தங்களின் வேலை மற்றும் கணக்கு வழக்குகளைப் பற்றி அவ்வப்போது கலந்து ஆலோசிப்பார். இவர்கள் இப்படி ஏமாற்றி விடுவார்களோ அப்படி ஏமாற்றி விடுவார்களோ என்ற அச்சம் இவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

ஏமாற்றமே மிஞ்சும்

மற்றவர்களுக்கு வேலை எளிதாக முடியும் ஆனால் ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகத்தின் விளைவால் கும்ப ராசி முதலாளிகள் நிம்மதி இழந்து தவிப்பார்கள். இவர்கள் எப்போதும் தன் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் தங்கள் வேலைகளைப் பற்றி பேசவே விரும்புவார்கள். வேலை நேரத்தில் வேலை பார்க்க வேண்டும் மற்ற நேரத்தில் மற்ற மனிதர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்காது. வெளியிடங்களுக்குப் போக வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும், வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்க வேண்டும் போன்ற இதரக் கடமைகள் எல்லாம் இவர்களுக்கு பெரும்மனச்சுமையாகத் தோன்றும் வேலையாட்களிடம் வேலை வாங்குவதே நிம்மதி தரும்

The post கும்ப ராசி முதலாளி வேலை வாங்குவதில் திறமைசாலி appeared first on Dinakaran.

Related Stories: