பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்தனர்: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நன்னிலம் தொகுதி உறுப்பினர் காமராஜ்(அதிமுக) பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. காப்பீடும் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: உறுப்பினர் சொல்வதற்கும், இப்போதுள்ள நடப்புக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை. கடந்த 3 ஆண்டுக் காலமாக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள், எவ்வளவு பேர் கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்தார்கள் என்பது நாட்டுக்குத் தெரியும். இந்த 3 ஆண்டுகளில் வறட்சி, திடீர் மழை இதுபோன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,059 கோடி கடந்த 3 ஆண்டுக் காலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காமராஜ்: டெல்டா மாவட்டங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போதுமான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அதற்கான தொகையினை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணியை விரைந்து செய்ய வேண்டும். பொங்கலுக்கு முன்பே கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு, அவர்களுக்கு தேவையான பணம் கிடைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

அமைச்சர் சக்கரபாணி: திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு இதுவரை இல்லாத அளவிலே 2021-22ம் ஆண்டு 3,182 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சுமார் 43,27,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டில் உச்சபட்சமாக 4,019 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 44,22,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2023-24ம் ஆண்டு 3,069 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 34,96,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரையில் 1,142 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை டெல்டா மாவட்டங்களிலே போதுமான நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலே 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

காமராஜ்: 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்று கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் மூன்றரை ஆண்டுகளில் சுமார் 35 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறதா? அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

அமைச்சர் ஐ.பெரியசாமி: இரண்டரை லட்சம் வீடுகளை பழுதுபார்க்க ரூ.2 ஆயிரம் கோடியே ஏற்கனவே முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்காக ரூ.3,070 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் வீடுகளில் 50 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் வேலைவாய்ப்பு வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இதை நீங்கள் நெருக்கமாக இருக்கும் ஒன்றிய அரசு தான் தெரிவித்துள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* எனக்கு அதிமுக பக்கமும் ஆதரவு இருக்கிறது, திமுக பக்கமும் ஆதரவு இருக்கிறது: பாஜ உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நகைச்சுவை
பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, அரசினர் தனி தீர்மானத்தின் மீது சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: முதல்வர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அது தொடர்பாக பேசும் உறுப்பினர்கள் ஆதரித்தும், எதிர்த்தும் பேசலாம். நிறை, குறைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், பேசும்போது வார்த்தைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று உள்ளது. பிரதமரை சிலருடன் ஒப்பிட்டு உறுப்பினர் ஒருவர் பேசினார். அதை சபாநாயகரும் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்.

சபாநாயகர் மு.அப்பாவு: ‘அவையில் பேசக்கூடாத வார்த்தை எதையும் யாரும் பயன்படுத்தவில்லை’ என்றார். இந்த நேரத்தில், அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘பண்ணையார் மைக்கை பார்த்து பேசுங்கள்’ என்று நயினார் நாகேந்திரனை பார்த்து கூறினார். உடனே, சபாநாயகர் அப்பாவு, ‘எங்கிருந்து ஆதரவு வருகிறது’ என்று பார்த்தீர்களா?’ என்று நகைச்சுவையாக கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், எனக்கு இங்கும் (அதிமுக) ஆதரவு இருக்கிறது. அங்கும் (திமுக பக்கம் கைகாட்டி) ஆதரவு இருக்கிறது என்றார். இதனால் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

அதன்பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், ‘பிரதமரை பற்றி கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருக்கட்டும். அப்போதுதான் எதிர்காலத்தில், இவர் சபாநாயகராக இருந்தபோது, பிரதமரை பற்றி இவ்வாறு பேசினார்கள்’ என்று தெரியும் என்றார். அதன்பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், 100 ஆண்டுகளாக ஒரே கல்விக்கொள்கை உள்ளது. முதல்வர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஏற்க இயலாது. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி, பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

* பால் விலை, கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: ஈஸ்வரன் வேண்டுகோள்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது ஈஸ்வரன் (கொ.ம.தே.க திருச்செங்கோடு தொகுதி) பேசியதாவது: கலைஞர் கனவு இல்லம் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல ஒன்றிய அரசின் மூலம் பிரதமர் வீடு திட்டம் மூலம் வீடு கட்டுவோருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தான் கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. விலை ஏற்றம் காரணமாக அந்த தொகையை உயர்த்தி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட பால்விலை ரூ.50 என்று நிர்ணயம் செய்ய வேண்டும். பனைமரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த இரண்டு உத்தரவுகளால் விவசாயிகள் வாழ்வு பொற்காலமாக மாறும். கடந்த 50 ஆண்டுகளாக திருமணி முத்தாறு திட்டம் கிடப்பில் உள்ளது. இன்னும் அதற்கான பணிகள் தொடங்க வில்லை. அதை செயல்படுத்த வேண்டும். விசைத்தறியாளர்களுக்கு சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.

The post பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகள் கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்தனர்: அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: