அறிவியல் அசுர வளர்ச்சி அடைந்துள்ள காலகட்டத்திலும், இன்றும் கிராமப் பகுதிகளில் பழமை மாறாமல் பொங்கல் திருநாளை பாரம்பரிய கலாச்சாரத்தின் அடிப்படையாகக் கொண்டு கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால், மண் பானை, மண் அடுப்புக்கு கிராம மக்களிடையே இன்றும் வரவேற்பு உள்ளது. இந்தநிலையில் திருத்தணி பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மண் பானைகள், அடுப்புகள் விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர். கிராம பெண்கள் மண்பாண்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பொங்கல் அடுப்பு, பானைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் பொங்கல் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில், பெரிய பொங்கல் பானை ரூ.400, மாட்டுப் பொங்கல் பானை ரூ.150, குட்டிப் பானை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பெரிய பொங்கல் அடுப்பு ரூ.400, மாட்டு பொங்கல் அடுப்பு ரூ.150க்கு விற்கப்படுகிறது. பச்சைப் பயிர் சட்டி ரூ.70க்கும், புள்ளகுட்டி சட்டி ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை கிராமப்புற பெண்கள் ஆர்வத்தோடு வந்து வாங்கிச் செல்வதால் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தில் அனைவருக்கும் வேலை கிடைப்பதோடு வருவாயும் அவர்களுக்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, சவுட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் குமார் கூறுகையில், 3 தலைமுறைகளாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பள்ளிப்பட்டு, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகள் மற்றும் அடுப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. கடும் பனிப்பொழிவுக்கிடையே கடந்த 10 நாட்களாக வெயிலடிப்பதால் பொங்கல் பானை மற்றும் அடுப்பு செய்ய வசதியாக உள்ளது. இதனால், அதிகளவில் மண் பானைகள், அடுப்பு தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளோம். தைப்பொங்கல் பானை, மாட்டுப் பொங்கல் பானை, மாட்டுப் பொங்கல் அடுப்பு, மாட்டுப் பொங்கல் அடுப்பு பச்சைப் பயிர் சட்டி, புள்ளகுட்டி சட்டி என்ற பல்வேறு வகைகளில் மண் அடுப்பு மற்றும் பானைகள், சட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.
The post பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் களைகட்டிய மண் பானை, அடுப்பு விற்பனை: ஆர்வத்துடன் வாங்கும் கிராம பெண்கள் appeared first on Dinakaran.