சென்னை: ‘‘இவன்தான் அந்த சார்’’ என்ற ஹேஷ்டேக்கில் அதிமுக வட்டச்செயலாளர் டிரெண்டிங்கில் உள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை தண்ணீர் கேன் போடும் சதீஷ் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் என இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடுவான்கரை பகுதியை சேர்ந்த அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி புகார்தாரரை தாக்கியதாகவும், புகார் மீதான சரிவர விசாரணை நடத்தவில்லை என குற்றஞ்சாட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக பிரமுகர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சதீஷுக்கு ஆதரவாகவும் அடைக்கலம் கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வழக்கில் அதிமுகவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் #இவன்தான்_அந்தSIR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
The post யார் அந்த சார்..? ‘இவன்தான் அந்த சார்’ ஹேஷ்டேக்கில் அதிமுக வட்டச்செயலாளர் டிரெண்டிங் appeared first on Dinakaran.