×

வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உறவினர்கள் வீட்டில் இருந்து 51 கத்திகள் பறிமுதல்; 7 பேர் கைது: ஆயுதம் பதுக்கிய பின்னணி என்ன போலீசார் விசாரணை

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டில் இருந்து 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜேஆர் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர், நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி கூட்செட் வழியாக செல்லும்போது இவரை வழிமறித்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனைப் பறித்து சென்றனர்.
இதுகுறித்து வெங்கடேசன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குற்றப்பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை என்கிற தமிழரசன் (40) மற்றும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 17வது பிளாக் பகுதியைச் சேர்ந்த முருகன் (45) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று காலை இவர்கள் இரண்டு பேரையும் வியாசர்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடியும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியுமான நாகேந்திரனின் உறவினர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இவரிடம் விசாரணை செய்ததில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (44), தமிழழகன் (39), கிஷோர் (30), சுகுமார் (29), தனுஷ் (28) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் நாகேந்திரனின் தம்பி ரமேஷ் என்பவர் வீட்டை சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் நாகேந்திரனின் பழைய வீட்டில் வசித்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 7 பேரும் பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் என்பதும், தொடர்ந்து இவர்கள் வியாசர்பாடி பகுதியில் நாகேந்திரனின் பெயரைச் சொல்லி மாமூல் வாங்குவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும் வியாசர்பாடியை சேர்ந்த பிரபல தாதா நாகேந்திரனுடன் அதே பகுதியைச் சேர்ந்த பெண் தாதா இலா மல்லி என்பவருக்கும் மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு இலா மல்லியின் மகனும் ரவுடியுமான விஜய்தாஸ் என்பவரை நாகேந்திரன் ஆதரவாளர்கள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்க இலா மல்லி காத்திருந்த நிலையில் உடல்நலக்குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அதன் பிறகு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய நாகேந்திரன் தரப்பினர் தற்போது ரவுடி தொழிலில் பின்னடைவை சந்தித்து இருப்பது போல ஒரு தோற்றம் நிலவுகிறது. இதனை பயன்படுத்தி நாகேந்திரன் எதிர்தரப்பு ரவுடிகள் ஒன்று சேர்ந்து நாகேந்திரனின் குடும்பத்தில் யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் ஏரியாவில் கெத்து காட்ட முடியும் எனவும் திட்டம் போட்டுள்ளனர்.

இந்நிலையில் இலா மல்லியின் மற்றொரு மகன் மோகன்தாஸ் மற்றும் நாகேந்திரனின் தம்பி முருகன் ஆகியோரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். இது நாகேந்திரன் தரப்பினரை அச்சமடைய செய்தது. இதனால் அவர்கள் ஆயுதத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் தற்போது சிறையில் இருப்பதால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணி நாகேந்திரன் குடும்பத்தினர் இவ்வளவு ஆயுதங்களை பதுக்கி வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் நாகேந்திரன் தரப்பிற்கு தொடர்ந்து தலைவலி கொடுத்து வரும் ஒரு வழக்கறிஞரை கொலை செய்வதற்காக நாகேந்திரனின் ஆட்கள் இந்த ஆயுதங்களை பதுக்கி வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உறவினர்கள் வீட்டில் இருந்து 51 கத்திகள் பறிமுதல்; 7 பேர் கைது: ஆயுதம் பதுக்கிய பின்னணி என்ன போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nagendran ,Chennai ,Venkatesan ,JJR Nagar Second Street, Korukkupet, Chennai ,Dinakaran ,
× RELATED ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது