×

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் மகளிரில் அமெரிக்கா ஆதிக்கம்: மூவர் காலிறுதியில் நுழைந்து அசத்தல்

அடிலெய்ட்: அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டிகளில் அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், எம்மா நவரோ, ஜெசிகா பெகுலா, ரஷ்ய வீராங்கனை சாம்சனோவா அபாரமாக ஆடி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் மேடிசன் கீஸ் – ஜெலினா ஒஸ்டபென்கோ மோதினர். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் செட்டை ஜெலினா கைப்பற்றினார். அதையடுத்து ஆக்ரோஷமாக ஆடத் துவங்கிய மேடிசன், 2 மற்றும் 3வது செட்களை எளிதாக கைப்பற்றினார். இதனால், 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா, அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோ களம் கண்டனர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை எம்மா 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டையும் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எம்மா போராடி கைப்பற்றினார். அதனால் நேர் செட்களில் வென்ற எம்மா காலிறுதிக்கு தகுதி பெற்றார். அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி இடையே நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெசிகா ஒரு மணி 13 நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் மரியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா சாம்சனோவா இடையே நடந்த மற்றொரு போட்டி 3 மணி நேரம் நீடித்தது. கடைசியில் பெரும் போராட்டத்துக்கு பின், 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பென்சிக்சை வீழ்த்திய சாம்சனோவா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

The post அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் மகளிரில் அமெரிக்கா ஆதிக்கம்: மூவர் காலிறுதியில் நுழைந்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Adelaide International Tennis Women's Championship ,Stunning ,Adelaide ,Madison Keys ,Emma Navarro ,Jessica Pegula ,Samsonova ,Adelaide International Tennis Women's Singles ,Adelaide, Australia… ,Quarterfinals ,Dinakaran ,
× RELATED அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் 2வது சுற்றில் யெலனோ, சாக்கரி