கேரளாவில் தர்கா கந்தூரி விழாவில் மதம் பிடித்து ஓடிய யானை: ஒருவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள புதியங்காடியில் பிரசித்தி பெற்ற யாஹும் தங்கள் அவுலியா தர்கா உள்ளது. இங்கு வருடம்தோறும் நேர்ச்சை திருவிழா நடைபெறுவது வழக்கம். 8 நாள் நடைபெறும் இந்த திருவிழாவின் இறுதி நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு வீதி உலா நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வீதி உலாவுக்காக பாக்கத்து ஸ்ரீகுட்டன் என்ற ஒரு யானை கொண்டுவரப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் வீதி உலா நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த யானைக்கு மதம் பிடித்தது.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து மிரண்டு ஓடிய யானை ஒருவரை பிடித்து தும்பிக்கையால் தூக்கி வீசியது. யானை மிரண்டு வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் கீழே விழுந்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகன்கள் மிகவும் சிரமப்பட்டு யானையை 2 மணி நேரத்திற்குப் பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

The post கேரளாவில் தர்கா கந்தூரி விழாவில் மதம் பிடித்து ஓடிய யானை: ஒருவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: