மதுக்கரை, ஜன.8: கோவை யை கேரளாவுடன் இணைக்கும்,கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையின் வழியாக தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள், மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழே சென்று வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அந்த பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் ஒரே நேரத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம் மட்டுமே அதன் வழியாக செல்ல முடியும்.
ஒருபுறத்தில் இருந்து வாகனங்கள் வரும்போது, மறுபுறம் வரும் வாகனங்கள் நின்றுகொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நீண்டகால பிரச்னையாக இருந்து வரும், இந்த குறுகிய பாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, கடந்த மாதம் டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர், ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் ஜீயை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இருந்தபோதும் இந்த குறுகிய பாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்ட அனுமதி வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
The post மதுக்கரை மரப்பாலத்தில் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு appeared first on Dinakaran.