×

கோவையில் தண்டவாளத்திற்கு யானைகள் வந்தால் அலார்ட் அனுப்பும் புதிய செயலி: அதிர்வுகள் மூலம் லோகோ பைலட்டுக்கு எச்சரிக்கை அனுப்பும்


கோவை: கோவை மதுக்கரை வனச்சரகத்தில் ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், கேபிள் பதிக்கப்பட்டு அதிர்வுகள் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறியும் ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எல்லையோர பகுதியான வாளையார், கேரள மாநிலத்தின் முக்கியமான நுழைவாயிலாக உள்ளது. சாலை மற்றும் ரயில் பாதைகள் இந்த பகுதி வழியாக செல்கின்றன. இதில் போத்தனூர் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதியை ஊடுருவி செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ‘ஏ‘ ரயில் பாதை 1.78 கி.மீ. தூரமும், ‘பி‘ ரயில் பாதை 2.8 கி.மீ தூரமும் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.

இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிகமாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பி ரயில் பாதையில் வாளையாறு – எட்டிமடை இடையே 2 இடங்களில் காட்டு யானைகள் கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 டவர்கள் அமைக்கப்பட்டு 12 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வரும்போது, கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத்துறையினருக்கும், லோகோ பைலேட்டிற்கும் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் லோகோ பைலேட் ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் மதுக்கரை வனச்சரக பகுதியில் ரயில் தண்டவாள பகுதிகளில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எட்டிமடை-வாளையார் இடையே உள்ள 2 சுரங்கப்பாதைக்கு அருகில் 2 கிமீ தூரத்திற்கு ரயில் தண்டவாள இரும்புகளை பயன்படுத்தி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் யானைகள் ரயில் தண்டவாளத்திற்கு செல்வது தவிர்க்கப்பட்டு, சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்லும் வகையில் இப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேசமயம் சுரங்கப்பாதைகள் மற்றும் ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளில் யானை நடமாட்டத்தை கண்டறிவது சிரமமாக இருந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பாலக்காடு ரயில் கோட்டம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிய யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக போத்தனூர் முதல் கஞ்சிகோடு வரை ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் ரூ.11 கோடி மதிப்பில் 48.4 கிமீ தூரத்துக்கு கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏ லைனில் 22 கிமீ தூரத்திற்கும், பி லைனில் 26.4 கிமீ தூரத்திற்கும் கேபிள்கள் பதிக்கப்படுகிறது. இந்த கேபிள்கள் டிஏஎஸ் என்ற சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது.

கேபிள்களுக்கு அருகே யானைகள் வரும்போது, ஏற்படும் அதிர்வுகள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு வனப்பணியாளர்கள், லோகோ பைலட் ஆகியோருக்கு எச்சரிக்கை ஒலியுடன் தகவல் அனுப்பப்படும். மொபைல் மற்றும் இணையதளம் மூலம் தகவல் அனுப்பப்படுவதால் எளிதாகவும், விரைவாகவும் ரயில் தண்டவாளத்தில் உள்ள யானைகள் நடமாட்டத்தை அறிந்து ரயிலின் வேகத்தை குறைக்கவும், நிறுத்தவும் செய்ய முடியும். இந்த செயலியை பயன்படுத்த பணியில் உள்ள லோகோ பைலட், வனப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். அதில் யானை நடமாட்டம் உள்ள பகுதியின் விபரங்கள், வரைபடம், அதிக யானை நடமாட்டம் உள்ள பகுதிகள், தினசரி, வாரந்திர மற்றும் வருட வாரியாக யானை நடமாட்டங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இதனால் யானைகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்படுவதும், ரயில் விபத்துகளில் யானைகள் உயிரிழப்பது தடுக்கவும் முடியும் என பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் தண்டவாளத்திற்கு யானைகள் வந்தால் அலார்ட் அனுப்பும் புதிய செயலி: அதிர்வுகள் மூலம் லோகோ பைலட்டுக்கு எச்சரிக்கை அனுப்பும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Madukkarai forest reserve ,Valayar ,Dinakaran ,
× RELATED ஸ்கூட்டருக்கு தீவைத்து எரித்து...