கோவை, ஜன.8: கோவை அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சிக்னல் இயங்கி வந்தது. இந்த சந்திப்பில் இருந்து ஆடிஸ் வீதி மற்றும் ஹெட் குவாட்டர்ஸ் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று வந்தன. இதனிடையே உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் காரணமாக உப்பிலிபாளையம் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டது.
பின்னர் யூ டர்ன் முறையில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் மாற்றியமைக்கப்பட்டது. ஆனாலும் இப்பகுதியில் கனரக வாகனங்கள் யூ டர்ன் எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து யூ டர்ன் முறை அகற்றப்பட்டு, பழையபடி வாகனங்கள் சிக்னல் பகுதியில் இருந்து செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பழையபடி மீண்டும் சிக்னலை பயன்பாட்டிற்கு போக்குவரத்து போலீசார் கொண்டு வரவில்லை.
இதனால் ஒரே நேரத்தில் அவிநாசி சாலை, ஆடிஸ் வீதி மற்றும் ஹெட் குவாட்டர்ஸ் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. மேலும் பல வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல திணறுகின்றனர். சில சமயங்களில் சிறு சிறு விபத்துகளும் நடந்து வருகின்றன. இதனைத் தவிர்க்க போக்குவரத்து போலீசார் பழையபடி மீண்டும் சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
The post சாலையை கடக்க திணறும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.