×

கோவையில் நேற்று அதிகாலை மேம்பாலத்தில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 37 பள்ளிகளுக்கு விடுமுறை: காஸ் கசிந்ததால் பதற்றம்

* பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு 10 மணி நேரத்துக்கு பின் முடிவுக்கு வந்த திக்..திக் சம்பவம்

கோவை: கோவையில் நேற்று அதிகாலை அவிநாசி சாலை மேம்பாலத்தில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது. விபத்து காரணமாக 37 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கோவை கணபதியில் வீடு மற்றும் வணிக நிறுவன சிலிண்டர்களுக்கு காஸ் நிரப்பும் பாரத் பெட்ரோலியத்திற்கு சொந்தமான கம்பெனி உள்ளது. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, கொச்சியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் இரவு காஸ் நிரப்பிய டேங்கர் லாரி கோவை புறப்பட்டு வந்தது. லாரியை தென்காசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில், லாரி நேற்று அதிகாலை 3 மணியளவில் கோவை மரக்கடையில் இருந்து அவிநாசி மேம்பாலத்தில் ஏறியது. மேம்பாலத்தில் அவிநாசி ரோட்டை நோக்கி வந்த போது, வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மதில் சுவற்றில் மோதியது. இதில், லாரியின் பின் பகுதியில் இருந்து டேங்கர் இணைப்பு உடைந்து தனியாக கழண்டு சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை யினர் டேங்கரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, லேசான கசிவு ஏற்பட்டு இருந்ததை பார்த்தனர். இதனால், அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க தீணைப்பு வீரர்கள் டேங்கர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர்.

சுமார் 7 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் 2500 லிட்டர் தண்ணீரை டேங்கர் மீது அடித்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முன்னதாக, போலீசார் பாலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை பேரிகார்ட் மூலம் அடைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், மாநகரில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டேங்கரில் கசிவு ஏற்பட்டதையடுத்து கலெக்டர் கிராந்தி குமார் அவிநாசி மேம்பாலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 37 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார். கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து மின் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. எண்ணை நிறுவனங்களில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் டேங்கரில் ஏற்பட்டு இருந்த கசிவை அடைத்தனர்.

அதன்பின், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட 3 கிரேன்கள் கவிழ்ந்து இருந்த டேங்கரை தூக்கி நிறுத்தினர். இதற்கிடையே, கிரேன் இயக்கத்திற்கு இடையூறாக இருந்த திருவள்ளூர் சிலை பாலத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, டேங்கரை மாற்று லாரியில் இணைத்து அங்கிருந்து கணபதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவன பிளாண்ட்டிற்கு எடுத்து சென்றனர். பாதுகாப்பிற்காக டேங்கர் லாரி உடன் போலீஸ் சைரன் வாகனமும், 4 தீயணைப்பு வாகனங்களும், 2 ஆம்புலன்சும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தால் கோவையில் பதற்றம் நிலவியது. விபத்து காரணமாக 10 மணி நேரத்திற்கு பின்னர் மாநகரில் இயல்பு நிலை திரும்பியது. சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில்,“விபத்து பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றது.’’ என்றார்.

* விரைவாக செல்ல பாலத்தில் வந்தேன்: டேங்கர் லாரி டிரைவர் பேட்டி
டேங்கர் லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29) என்பவர் ஓட்டி வந்தார். அவர் விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து கூறியதாவது: கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாவட்டம் கணபதியில் உள்ள பாரத் காஸ் நிறுவனத்துக்கு 18 டன் எடை கொண்ட காஸ் ஏற்றி வந்தேன். அதிகாலை 2 மணிக்கு க.க.சாவடியில் இருந்து புறப்பட்டேன். அவினாசி ரோடு மேம்பாலத்தில் ரவுண்டாவை சுற்றிவந்த போது திடீரென லாரியையும், டேங்கரையும் இணைக்கும் பாகம் உடைந்தது. இதனால் டேங்கர் தனியாக கழன்று சாலையில் கவிழ்ந்தது. உள்ளே காஸ் இருந்ததால் உடனே இது குறித்து காஸ் நிறுவத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

* டிரைவர் மீது வழக்கு
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது மேற்கு போக்குவரத்து போலீசார் அஜாக்கிரதையாக செயல்படுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 100 கிலோ காஸ் கசிந்தது
எண்ணை நிறுவனங்களின் மெக்கானிக்கல் காண்டிராக்டர் ராபர்ட் கூறுகையில்,“டேங்கரில் இருந்து 80 முதல் 100 கிலோ காஸ் கசிந்து உள்ளது. கசிவு சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே லாரி அனுப்பி வைக்கப்பட்டது’’ என்றார்.

The post கோவையில் நேற்று அதிகாலை மேம்பாலத்தில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 37 பள்ளிகளுக்கு விடுமுறை: காஸ் கசிந்ததால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tik ,Avinashi Road ,Dinakaran ,
× RELATED சாலையை கடக்க திணறும் வாகன ஓட்டிகள்