×

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: சென்னை உள்பட 25 இடங்களில் நடந்தது

* பல கோடி மதிப்புடைய சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு முதலீடுகள் சிக்கின

சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ஈரோடு ராமலிங்கத்திற்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை தலைமையிடமாக என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்மான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான என்.ராமலிங்கத்திற்கு சொந்தமானது. என். ராமலிங்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.

என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு இயக்குநர்களாக என்.ராமலிங்கத்தின் மகன்களான சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட மாநில முழுவதும் மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என வெளிமாநிலங்களிலும் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிறுகூனம் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது மற்றும் பெரிய அளவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2022-23 மற்றும் 2023-24ம் நிதியாண்டில் தனது வருமானத்தை பெரிய அளவில் குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 23ம் நிதியாண்டை விட குறைத்து 24ம் நிதியாண்டில் கணக்கு காட்டியது தான் அந்த குற்றச்சாட்டு. ஆனால் 2023-24ம் நிதியாண்டில் பல கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் மூலம் வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று ஒரே நேரத்தில் பெங்களூரு, கோவை அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் செட்டிபாளையத்தில் உள்ள என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் கிளை நிறுவனங்கள், என்.ராமலிங்கம் வீடு, மகன்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.

ஈரோட்டில் பங்குதாரர்களாக உள்ள மற்றொரு கட்டுமான நிறுவன அலுவலகம் என 5 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கடந்த 2 ஆண்டுகளாக வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், நிறுவனத்தின் ஆண்டு வருவாய், நிகர லாபம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், ராமலிங்கத்தின் வீடு மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள சூரியகாந்த் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் அலுவலகத்தில் இருந்து, இரண்டு விதமான கணக்கு விபரங்களை பரமாரித்து வந்ததற்கான கணினி, லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், என்.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கான ஆவணங்கள், பங்கு முதலீட்டு பத்திரங்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரொக்க பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் கோடம்பாக்கம் ஸ்டேஷன் வியூ சாலையில் உள்ள ‘மன்னா’ இனிப்பு மற்றும் கேக் தயாரிப்பு மற்றும் விற்பனை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள எஸ்பிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ஜே.டி.மெட்டல் நிறுவனத்திற்கு தொடர்பான திருவொற்றியூர், சாந்தங்காடு, பூக்கடை என 6 இடங்களில் சோதனை நடந்தது.

* என்ன உறவுமுறை
பெருந்துறையை சேர்ந்த தொழிலதிபரான சுப்பிரமணியன் மூத்த மகளை தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதேபோல் ஈரோடு தொழிலதிபர் ராமலிங்கம் தனது இளைய மகன் சந்திரகாந்துக்கு எடப்பாடியின் சம்மந்தியின் இளைய மகளை திருமணம் செய்துள்ளார். அந்த வகையில் எடப்பாடி மகனும் ராமலிங்கம் மகனும் சகலை முறை. இதனால் அதிமுக ஆட்சி காலத்தில் ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனம் அரசு ஒப்பந்தங்களை பெரிய அளவில் எடுத்து பணிகள் செய்து வந்துள்ளது. அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் ராமலிங்கத்தின் நிறுவன சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: சென்னை உள்பட 25 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Ramalingam ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,Erode ,Dinakaran ,
× RELATED 26 இடங்களில் வருமானவரித்துறை சோதனை..!!