அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதலமைச்சர் பதில்..!!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025-இன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாளான இன்று அ.தி.மு.க-வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், டங்ஸ்டன் தடுப்போம், மேலூரைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து தொடங்கிய கேள்வி நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்கட்சியான அ.தி.மு.க., ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன கொண்டுவந்தன. தொடர்ந்து இதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில,

அண்ணா பல்கலை. விவகாரம் – முதலமைச்சர் பதில்

பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி அண்ணாவுக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – மாபெரும் கொடூரம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மாபெரும் கொடூரம். இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இதை பயன்படுத்தி ஆட்சி மீது தவறான எண்ணத்தை உருவாக்க சில உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர்.

மாணவிக்கு நீதி பெற்றுத்தருவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை

இந்த ஆட்சி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த ஒரு உறுப்பினர் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி பெற்றுத் தருவதை தவிர வேறு எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை. சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதைவிட தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

அரசியல் ஆதாயத்துக்காக அரசை குறை கூறுவதா?

குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தால் காப்பாற்ற முயற்சி செய்திருந்தால் அரசை நீங்கள் குறை சொல்லலாம். குற்றம் தொடர்பான ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும் அரசை குறை கூறுவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே.

வழக்கு பதிந்த மறுநாளிலேயே குற்றவாளி கைது

வழக்கு பதிவு செய்யப்பட்ட மறுநாள் காலையிலேயே குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். மாணவி தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.ஐ.சி.யே காரணம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லை, சிசிடிவி கேமராக்கள் இல்லை என சொல்வதில் உண்மையில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்ஐஆர் வெளியானதை என்ஐசி ஒப்புக்கொண்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியைக் கொண்டே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வேறு யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்.

யார் அந்த சார்? – ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்

யார் அந்த சார் என்று பேசும் எதிர்க்கட்சிகள் அது தொடர்பாக ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு | குழுவிடம் ஒப்படைக்கலாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு திமுக அரசு அடக்கும்.

60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 60 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யாராக இருந்தாலும் தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். வீண் விளம்பரம், குறுகிய லாபத்துக்காக மலிவான அரசியலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எடுபடாது

வீண் அரசியல் லாபத்துக்காக வதந்திகளை பரப்ப வேண்டாம்; இந்த சதி மக்கள் மத்தியில் எடுபடாது. பெண்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். பெண்கள் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுத்துவரும் அரசை பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை; வீண் பழி சுமத்தாமல் இருந்தால் போதும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது.

வீண் அரசியலை தவிர்த்தாலே பெண்கள் பாதுகாப்பு உறுதியாகும்

வீண் அரசியலை தவிர்த்தாலே பெண்கள் பாதுகாப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று ஐகோர்ட்டே கூறியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முதல் 10 நகரங்களில் சென்னை, கோவை உள்ளது. தமிழ்நாட்டில்தான் அதிக பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்தது என்ன?

மனசாட்சி இன்றி பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுகிறவர்கள் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப்பாருங்கள்.கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று யோசித்து பாருங்கள்?. பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ விசாரணைக்கு பிறகே பொள்ளாச்சி விவகாரத்தில் பல உண்மைகள் வெளியாகின. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தது. பொள்ளாச்சி சம்பவம்தான் அன்றைய முதல்வர் “சார்” ஆட்சியின் சட்டம் ஒழுங்கின் லட்சணம். பொள்ளாச்சி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைதுசெய்யாமலே வழக்கை முடிக்க முயற்சி நடந்தது. சிபிஐ விசாரணையில்தான் பொள்ளாச்சி சம்பவம் முழுவதும் அதிமுக பிரமுகர்களால் நடந்தது தெரியவந்தது.

முதலமைச்சரை பேச விடாமல் அதிமுகவினர் அமளி

சட்டப்பேரவையில் முதலமைச்சரை பேச விடாமல் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி விவகாரத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசியபோது அதிமுகவினர் அமளி. முதலமைச்சர் பதில் சொல்வதை உங்களால் கேட்க முடியவில்லையா? என அதிமுகவினருக்கு பேரவை தலைவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவினரை பார்த்து 100 சார் கேள்விகளை கேட்க முடியும்

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சிதான் என முதலமைச்சர் தெரிவித்தார். பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு முயன்றது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய “சார்”கள் எல்லாம் பேட்ஜ் அணிந்து வந்து அமர்ந்துள்ளனர். அதிமுகவினரை பார்த்து 100 சார் கேள்விகளை கேட்க முடியும் இவ்வாறு தெரிவித்தார்.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதலமைச்சர் பதில்..!! appeared first on Dinakaran.

Related Stories: