விழுப்புரம்: விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் கரையில் சங்க கால நாகரீகத்தை பறைசாற்றும் அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே அங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் வடகரையில் அய்யங்கோவில்பட்டு மற்றும் தென்னமாதேவி ஆகிய கிராமங்கள் உள்ளது. தற்போது பெஞ்சல் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பினால் ஊரின் மேற்பரப்பில் சங்க கால வாழ்விட பகுதியின் தொல்பொருள் எச்சங்கள் வெளிப்பட்டதை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான சதிஷ்குமார் மற்றும் வீரவேல் ஆகியோர் கண்டறிந்து பேராசிரியர் ரமேஷிடம் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர் பேராசிரியர் ரங்கநாதன் மற்றும் கீழடி தொல்லியல் வல்லுநர் சேரன் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் கொண்ட குழுவினர் இப்பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது மேலும் பல தொல்லியல் எச்சங்களை கண்டறிந்தனர். இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: இந்த ஆய்வில் புதிய கற்காலம் தொடங்கி சோழர் காலம் வரையிலான பலதரப்பட்ட தொல்பொருட்களான நன்கு மெருகேற்றப்பட்ட உளி போன்ற அமைப்புடைய செல்ட் என்கிற கற்கால கருவி, இரு முனை கொண்ட கற்கோடாரி, அரியவகை கல் மணிகள், பீப்பாய் வடிவ சூதுபவளம் மணிகள், பொத்தான் வடிவ மற்றும் துண்டிக்கப்பட்ட ஸ்படிக மணிகள், பல நிறங்கள் கொண்ட பல வடிவங்களில் கண்ணாடி மணிகள் மற்றும் அகேட் மணிகளும் கிடைத்துள்ளது. சுடுமண்ணாலான பொருட்களை பொறுத்தவரை பெண் தலை உருவம் நூல் நூற்கும் தக்களி, ஆட்டக்காய்கள், வட்டசில்லுகள், மணிகள் மற்றும் முத்திரை புலி மற்றும் இரட்டை மீன்களோடு உத்தமசோழக என்று தேவநாகரி எழுத்து பொறிக்கப்பட்ட செப்புக்காசு போன்றவைகளும் கிடைத்துள்ளது.
இந்த பொருட்கள் தவிர அரித்து செல்லப்பட்ட மேற்பரப்பில் நடுத்தரம் முதல் சொரசொரப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் முதல் கருப்பு நிற ஓடுகள், சிவப்பு பூச்சு பூசப்பட்ட ஓடுகள் மற்றும் சேமிப்பு கொள்கலன் பானை ஓடுகளும் காணப்படுகிறது. தென்னமாதேவியில் “ஆனைமேடு” என அழைக்கப்படும் தொல்லியல் மேட்டில் சங்க காலத்துடன் மிகவும் தொடர்புடைய பொருள்களை கொண்ட ஒரு செழுமையான நாகரிக இடமாக கருதப்படுகிறது. இந்த தொல்லியல் மேடானது 500 முதல் 600 மீட்டர் நீளம் வரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதே போன்று பம்பை ஆற்றின் வடகரையில் அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் சாஸ்தா கோயிலுக்கும் பம்பை ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் சற்று மேடான விவசாய நிலத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் சங்க கால மக்களின் வாழ்விட பகுதியின் தொல்லியல் எச்சங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.
குறிப்பாக அரியவகை கற்களான கார்னிலியன், அகேட் போன்ற மணிகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கண்ணாடி மணிகளும் கிடைத்துள்ளது. சுடுமண்ணால் செய்யப்பட்ட கெண்டி மூக்குகள், மூடிகள், அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களின் கழுத்து பகுதி மேலும் ரவுளட்டட் ஓடுகளை ஒத்த மெருகேற்றப்பட்ட ஆரஞ்சு நிற பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. எனவே சங்ககாலம் தொட்டே பம்பை ஆறு ஒரு முக்கியத்துவம் பெற்று வந்திருப்பதை அறிய முடியகிறது. மேலும் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டால் பம்பை ஆற்றின் நாகரிகத்தை முழுமையாக அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேவார பாடலில் பம்பை நதி
இந்த பகுதிக்கு அருகில் சோழர்கால சாஸ்தா அபிராமிஸ்வரர் என்னும் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காணப்படும் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் இவ்வூர் கயிறுர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இவ்வூர் பெயர் இங்குள்ள அய்யனார் கோயிலின் அடிப்படையில் அய்யன்கோயில்பற்று என்றாகி பின்னர் அதுவே தற்போது அய்யங்கோவில்பட்டு என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது. தேவாரப்பாடல்களில் பம்பை நதியை பற்றிய குறிப்பு வருகிறது என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார்.
The post விழுப்புரம் அருகே பெஞ்சல் புயலால் வெளிப்பட்டது; பம்பை ஆற்றின் கரையில் சங்க கால நாகரீக அரிய பொருட்கள் கண்டெடுப்பு: அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்தல் appeared first on Dinakaran.