செந்திலை உணர்ந்து உணர்ந்து! கந்தனை அறிந்து அறிந்து!!
அழகன் முருகன் அருள்புரியும் ஆறுபடை வீடுகளுமே அனைவர் மனத்தையும் ஆட்கொள்ளும் அற்புதமான தலங்கள் என்றறிவோம். இருப்பினும் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சூரனை வென்ற கடற்கரைத் தலமாக விளங்குவதால் அருளாளர் கட்கும் பொது மக்களுக்கும் ஆனந்தத்தையும், திருவருளையும் அதிகப் படியாகத் தந்து முதலிடம் பெற்ற முக்கியமான முருகன்
நகராகத் திகழ்கிறது.
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்
பொழில்! தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்! மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும் வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே!
என்று களிப்புடன் பாடுகிறார் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர். பிரணவத்திற்கு பொருள் பகர இயலாத நான்முகனைக் குட்டிச் சிறையில் வைத்தார் வேலவன் என்ற கந்த புராணக் கதையை நாம் அறிவோம். அப்படிப்பட்ட நிலையில் கந்தன் அடியவர்க்கு அந்த பிரமன் எழுதிய தலையெழுத்து எப்படி பலிக்கும்? அயன் கையெழுத்தே அயலாகிவிடும் முருகன் பக்தர்களுக்கு என அறுதியிட்டுச் சொல்கிறார் அருணகிரியார். திருமுருக வாரியார் சுவாமிகள் கூறுகிறார் ‘முருகன் அடியவர்களுக்கு ஜோசியம் சொன்னால் பலிக்காது. திருச்செந்தூர் முருகனின் பிரசாதமான திருநீறு அணிந்து தீவினைகள் அனைத்தையும் சாம்பலாக்கலாம், என்று வெண்பா ஒன்று விளம்புகிறது.
வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே!- செந்தில் நகர்
சேவகா! என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை!
அனைவர் வாழ்வினையும் அஸ்தமனமாக்கும் எமனின் வருகையை எவர்
விரும்புவர்?
அந்தத்தை (முடிவு) ஏற்படுத்துவதால் அந்தகன்
குறித்த காலத்தில் வந்து விடுவதால் காலன்
உடல்வேறு உயிர் வேறாகக் கூறுபடுத்துவதால் கூற்றுவன்.
இவ்வாறெல்லாம் பெயர் பெற்ற எமதேவனே முருகன் அடியார்களின் உயிர் பறிக்க அஞ்சுவான் என ஆரம்பமாகிறது இந்த அற்புதத் திருப்புகழ்.
‘‘அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
அன் புருகு சங்கதம் தவிர முக்குணம் மாள
அந்தி பகல் என்றிரண்டையும் ஒழித்து
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து
அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி
செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுறக்
கந்தனை அறிந்து அறிந்து அறிவினிற்
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத
சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து
என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய்ச்
சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ’’
சில நிமிடதேக சுகத்திலேயே சிக்குண்டு சின்னாபின்னமாகும் என சிந்தையை உன் திருவடிகளிலேயே உறுதியாக வைப்பதை அடியேன் அறிந்து கொள்ளவில்லையே!
காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றிலேயே கட்டுண்டு கிடக்கும் அடியேனை ஆறுமுகனே! நீ தான் அபயமளித்து காக்க வேண்டும். தினையளவு சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு மலையளவான பேரின்பத்தை புறந்தள்ளும் அறிவிலியாகிய என்னை கருணைக் கடலான தாங்கள் தான் காத்தருள வேண்டும் கந்த சாமியே! உன்னைப் பூரணமாகப் புரிந்து கொண்டு நீ திருவருள் புரியும் திருச்செந்தூரின் மகிமையை உணர்து தெளிவடையும் ஞானத்தை அடியேனுக்குத் தந்தருளும் என இத்திருப்புகழிலே தெரிவிக்கின்றார் அருணகிரிநாதர்.
‘பகைவனுக்கு அருவாய்!- நன்னெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்!’
– என்று பாடுகிறார் பாரதியார்.
பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளர
தகைமைக் கண் தங்கிற்றே உலகு
– என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.
எதிர்த்த சூரபத்மனையே ஏற்றிப் போற்றும் மயிலும் வேலுமாக ஆக்கி மதிக்க வைத்த தலம் திருச்செந்தூர். வெற்றி பெற்ற வேலனை இந்திரன், பிரம்மா, திருமால், தேவர்கள் என அனைவரும் வந்து போற்றத் தலைப்படும் போது பாராட்டு, பரிசளிப்பெல்லாம் எனக்கு வேண்டாம். என் தந்தையாகிய சிவன் தந்த சீதனம்தான் இந்த வெற்றி. நான் சிவபெருமானை பஞ்சலிங்கங்கள் அமைத்து இத்தலத்தில் பூஜிக்க போகிறேன் என்று அடக்கத்துடன் ஆறுமுகன் சிவலிங்கங்களை அர்ச்சனை செய்த தலம் திருச்செந்தூர் மேலும் திருப்புகழிலே பாடுகின்றார்.
“கொந்தவிழ் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதிபெற
குஞ்சரி குயம்புயம் பெற அரக்கர்மாளக்
குன்றிடிய அம்பொனின் திரு அரைக்
கிண்கிணி ‘கிணின் கிணின் கிணின்’ என
குண்டலம் அசைந்து இளங்
குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தனம் தனம்தனம் தன எனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட மணித்
தண்டைகள் கலின் கலின் கலின் என
திருவான
சங்கலி மனங்குழைந்து உருக
முத்தம தர வரும் செழும் தளர் நடைச்
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே!’’
தளர் நடையிட்டு, இடுப்பிலே கட்டியுள்ள கிண்கிணி சப்திக்க, குண்டலம் காதுகளில் மின்னி ஒளி வீச காற் சதங்களைகள் கலின்கவின்’ என அன்னை பார்வதி அகம் மகிழ்ந்து ஆரத்தழுவ வையகத்தோர் அனைவரும் வாழ்த்துப்பாட வரும் வடிவேலரே! இருவினை, மும் மலமும் நீங்கி அடியேன் பேரின்பப் பெருவாழ்வு பெற அருள்வாயாக! என வேண்டுகோள் விடுக்கும் இத்திருப்புகழ் தற்கால ஒலி ஒளிக் காட்சிகள் தோற்கும் வண்ணம் தத்ரூபமாக பால முருகனை படம் பிடிக்கிறது.
கிணின்கிணின், தனம் தனம் தன, கலின் கலின் என ஓசைச்சிறப்புடன் ஒலிக்கின்ற இந்த உயரிய பாடலைப் பாடுவோர் பாடினால் செந்தூர் கந்தன் சேவடி பெயர்த்து நேரடியாக வருவான் என்பது நிதர்சனம்!
The post திருப்பம் தரும் திருப்புகழ்-15 appeared first on Dinakaran.