இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி குடோனில் பதுக்கிய ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்

 

தூத்துக்குடி,ஜன.6: இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடியில் உள்ள குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ பீடி இலையை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது பீடி இலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்கும்பொருட்டு தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தருவைகுளம் மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் முத்துமாரி தேவேந்திரர், செல்வராஜ் மற்றும் போலீசார் அந்த குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு தலா 60 கிலோ எடை கொண்ட 31 பண்டல்களில் சுமார் 2 ஆயிரம் கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் அந்த பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி குடோனில் பதுக்கிய ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: