இந்த முறை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பிரதிநிதிகள் சபையில் பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா மாகாணத்தின் 7வது மாவட்ட பிரதிநிதியாக அமி பெரா பொறுப்பேற்றார். இவரே இந்திய வம்சாவளி எம்பிக்களில் மூத்த தலைவர் ஆவார். பெராவைத் தவிர, வர்ஜீனியா மாகாணத்தின் 10வது மாவட்ட உறுப்பினராக முதல் முறை எம்பி சுஹாஷ் சுப்ரமணியன், மிச்சிகன் 13வது மாவட்ட பிரதிநிதியாக தானேதர், கலிபோர்னியாவின் 17வது மாவட்ட பிரதிநிதியாக ரோ கன்னா, இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8வது மாவட்டத்தை சேர்ந்த பிரதிநிதியாக ராஜா கிருஷ்ணமூர்த்தி, வாஷிங்டனின் 7வது மாவட்ட பிரதிநிதியாக பிரமிளா ஜெயபால் ஆகியோரும் பொறுப்பேற்றனர். இதில் பிரமிளா ஜெயபால், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க பெண் ஆவார்.
119வது நாடாளுமன்ற பதவிக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அவை சபாநாயகர் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய சபாநாயகரான மைக் ஜான்சன், ஜனநாயக கட்சி சார்பில் ஹகீம் ஜெப்ரீசை எதிர்த்து போட்டியிட்டார். இதில், மைக் ஜான்சன் 219 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெப்ரீஸ் 215 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மீண்டும் சபாநாயகராக தேர்வான மைக் ஜான்சனுக்கு புதிய அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சபாநாயகர் என்ற பெருமையை மைக் ஜான்சன் பெற்றுள்ளார்.
The post அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் 6 இந்திய வம்சாவளியினர் எம்பிக்களாக பதவியேற்பு appeared first on Dinakaran.