தண்டையார்பேட்டை: பாரிமுனையில் வங்கியில் வாங்கிய கடனை லோக் அதாலத் மூலம் தள்ளுபடி செய்து தருவதாக கூறி ₹2.38 லட்சம் வாங்கி மோசடி செய்த போலி வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல் விடுத்த அவரது 2வது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர் அடுத்த பழவந்தாங்கல் பிருந்தாவனம் நகரை சேர்ந்தவர் சரவணன் (42). இவர், கடந்த 23ம் தேதி உயர்நீதிமன்றம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் அயனாவரம் சோலையம்மாள் நகரை சேர்ந்த வினோத்குமார் (38) என்பவர் பேஸ்புக்கில் கார் வாங்குவதன் மூலம் எனக்கு அறிமுகமானார். அப்போது, குடும்ப செலவிற்காகவும், மருத்துவ செலவிற்காகவும் என்னுடைய நண்பர் பாலாஜியின் கிரெடிட் கார்ட் மூலம் வங்கியில் 11 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். அந்த பணத்தை ஒழுங்காக கட்டும்படி வங்கி ஊழியர்கள் தொல்லை கொடுக்கிறார்கள் என வினோத்குமாரிடம் கூறினேன். அதற்கு அவர், ‘நான் வழக்கறிஞராக இருக்கிறேன். லோக் அதாலத் மூலம் வங்கியில் வாங்கிய கடனை பாதி கட்டிவிட்டு மீதமுள்ளதை தள்ளுபடி செய்துவிடலாம்’ என கூறினார்.
இதற்காக கூகுள்பே மூலம் 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை வினோத்குமார் வங்கி கணக்கு அனுப்பினேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டால் அவரது மனைவி நாகலட்சுமி (33) என்பவர் எடுத்து என்னுடைய கணவர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொல்லை கொடுத்தால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். எனவே, வினோத்குமார் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
மனுவை பெற்ற ஆய்வாளர் வர்கீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான வினோத்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வினோத்குமார், அயனாவரம்-குன்னூர் சாலையில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வருவதும், பிஎல் படிப்பை முழுமையாக முடிக்காமல் போலி சான்றிதழ் தயாரித்து வக்கீல் என கூறிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து வக்கீல் கோட், விசிட்டிங் கார்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான வினோத்குமாரின் 2வது மனைவி நாகலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
The post வங்கி கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி ₹2.38 லட்சம் வாங்கி ஏமாற்றிய போலி வக்கீல் கைது: தலைமறைவான 2வது மனைவிக்கு வலை appeared first on Dinakaran.