×

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி 38 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 18 வயது மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் 2வது மகளான 13 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றதால் வீட்டில் இருந்துள்ளார். காலை 11 மணியளவில் இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பார்க்க இளையராஜா என்பவர் வந்துள்ளார்.

அப்போது தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமியிடம் தவறான கண்ணோட்டத்தில் பேசி சிறுமியின் வீட்டில் உள்ளே யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டு சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இளையராஜாவை அங்கிருந்து துரத்தி அடித்துள்ளனர். மேலும் உடனடியாக சிறுமியின் தாய் லட்சுமிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளனர்.

உடனடியாக லட்சுமி வீட்டிற்கு வந்து தனது மூத்த மகளுடன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 4வது தெருவை சேர்ந்த இளையராஜா (49) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனியார் கம்பெனியில் மேலாளர் ஒருவருக்கு கார் டிரைவராக வேலை செய்து வந்ததும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ள நிலையில் கடந்த 15 நாட்களாக இவரது முதலாளி வெளிநாட்டுக்கு சென்றதால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.  இதையடுத்து இளையராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Lakshmi 38 ,Pulianthope ,Dinakaran ,
× RELATED போதை மாத்திரை விற்ற தம்பதி கைது