காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது. இதனால், நிம்மதியடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், காஞ்சி முக்கிய சாலைகளில் மாற்றம் கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். முக்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மையாக கருதப்படுவது காஞ்சி மாநகரம். கோயில்களின் நகரம், பட்டு நகரம் என்று பல்வேறு சிறப்புகளை பெற்ற காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கவும், பட்டுச்சேலை வாங்கவும் வெளி மாவட்டம், மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.
மேலும், சென்னை மற்றும் புறநகரை ஒட்டியுள்ள பெரும்புதூர், ஒரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஏராளமானோர் காஞ்சிபுரத்தில் தங்கியுள்ளனர். பிரதான சாலைகளான மேற்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, செங்கழுநீரோடை வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு, காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு, காந்தி ரோடு, செவிலிமேடு, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, வரதராஜ பெருமாள் கோயில் வடக்கு மாடவீதி, ஏகாம்பரநாதர் கோயில் மாடவீதிகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் விழாக்காலங்கள், முகூர்த்த நாட்களில் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் தேரோடும் சாலைகளில் மேம்பாலம் அமைக்க முடியாது என்ற காரணத்தால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு, ஓரளவு தீர்வு காணும் வகையில் நடைபாதைகள் இருந்தாலும், பயனற்றதாகவே உள்ளன. மேலும், மாநகராட்சி அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரம் பரந்து விரிந்து உள்ளது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணிக்க போதிய பொது போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் தனிப்பட்ட வாகனமாக டூவீலர் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது.காஞ்சிபுரத்தின் தீராத பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், போலீஸ் எஸ்பி சண்முகம் தலைமையில் அதிகாரிகள் நகரின் முக்கியமான பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.அதன் அடிப்படையில், காந்தி சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள், சிறுகடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டு 3 வழிப் பாதையாக மாற்றம் செய்தனர். இதன்மூலம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு சீரானது. இதனைத்தொடர்ந்து பூக்கடை சத்திரம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோன்று, அன்னை இந்திராகாந்தி சாலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
The post காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு appeared first on Dinakaran.