கோவை: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் உணவு தேடி தோட்டங்கள் மற்றும் ஊர்களுக்குள் புகுந்து பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உணவு பொருட்களை உண்டு செல்கிறது. தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்களையும், உணவுகளையும் சூறையாடிச் செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தோட்டத்தில் பூட்டி இருந்த இரும்பு கேட்டை அசால்டாக துதிக்கையால் தள்ளி திறந்து செல்லும் காட்டு யானையின் வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டங்களுக்கு சோலார் மின்வேலி மற்றும் பூட்டப்பட்டு இருக்கும் இரும்பு கேட் கதவுகளை திறந்து உள்ளே செல்ல யானைகள் தற்பொழுது கற்றுக் கொண்டு உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என உணர்ந்து உள்ள யானைகள் மின்சாரம் தாக்கும் என்று அச்சம் இல்லாமல் உள்ளேன் நுழைய துவங்கி உள்ளதாக, இதனால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு தமிழக அரசும், வனத் துறையும் யானைகள் வராமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
The post நான் தான் வருவேன்னு தெரியும் இல்ல – அப்புறம் ஏன் கேட்டை பூட்டுற: அசால்டாக கேட்டை திறந்து உள்ளே செல்லும் ஒற்றைக் காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள்..! appeared first on Dinakaran.