×

பிஏபி வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் வாழை, தென்னந்தோப்புக்குள் புகுந்த தண்ணீர்

பல்லடம், ஜன.4: பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி அம்மாபாளையம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அந்தப்பகுதியில் விவசாயிகள் சுமார் 10 ஏக்கரில் வாழை மற்றும் தென்னை உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் திறக்கப்பட்ட பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் அப்பகுதி தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:
பிஏபி பாசன வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர் எங்களது தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களின் கீழே தேங்கி நிற்கிறது. இதனால் வாழை மரங்கள் அழுகி வருகின்றன. தண்ணீர் தேங்கி நின்று தென்னை மரங்கள் பாதிப்பு அடைந்துள்ளன. வேர்கள் அழுகும் நிலையில் உள்ளதால், பல ஆண்டுகளாக பாதுகாத்து, பராமரித்த தென்னை மரங்கள் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இது கடந்த சில வருடங்களாக தொடர் கதையாக நீடித்து வருகிறது.

இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு முறையும் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் போது தோட்டத்திற்குள் தண்ணீர் புகுவதால், பயிரிட்ட வாழை மற்றும் பயிர்கள் சேதம் அடைந்து லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி தோட்டத்திற்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பிஏபி வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் வாழை, தென்னந்தோப்புக்குள் புகுந்த தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Ammapalayam ,Manikapuram panchayat ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் காவலர்களின் காலில் விழுந்து வணங்கிய பெண்